உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  வாசனை திரவியங்கள் குடோனில் தீ ரூ.20 கோடி பொருட்கள் தீக்கிரை

 வாசனை திரவியங்கள் குடோனில் தீ ரூ.20 கோடி பொருட்கள் தீக்கிரை

நெலமங்களா: வாசனை திரவியம் சேகரித்து வைத்திருந்த குடோனில், எதிர்பாராமல் தீப்பிடித்ததில், 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா தாலுகாவின், மாகளி அருகில் வாசனை திரவியங்கள் சேகரித்து வைக்கும் குடோன் உள்ளது. இது மாகளி கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவருக்கு சொந்தமானது. இவர் குளிர்சாதன பெட்டி, வாசனை திரவியங்கள் உட்பட, பல்வேறு பொருட்களை சேகரித்து வைக்க, மூன்று தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு அளித்துள்ளார். நேற்று காலை, 11:30 மணியளவில் வாசனை திரவியங்கள் வைத்திருந்த குடோனில் தீப்பிடித்தது. அதன்பின் அங்கிருந்த காஸ் வெடித்ததில், பக்கத்து பகுதிகளுக்கும் தீ பரவியது. குடோனில் 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தீப்பிடித்தவுடன் அவர்கள் வெளியே ஓடி வந்தனர். சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தகவலறிந்து 10 வாகனங்களுடன் அங்கு வந்த தீயணைப்பு படையினர், நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி, தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள், தீக்கிரையானதாக தகவல் வெளியாகியுள்ளது. மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து, மாதநாயகனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை