அன்னபாக்யா அரிசி திருட்டு; உணவு துறையினர் மீது சந்தேகம்
சாம்ராஜ்நகர் : உணவுத்துறையின் பல்வேறு குடோன்களில் சேகரித்து வைத்திருந்த அன்னபாக்யா அரிசி திருடப்பட்டு உள்ளது.சாம்ராஜ்நகரின், சத்தி சாலையில் காளனஹுன்டி கிராமத்தில் கர்நாடக உணவுத்துறைக்கு சொந்தமான குடோன்கள் உள்ளன. இந்த குடோன்களில் அன்னபாக்யா அரிசி சேகரித்து வைக்கப்பட்டிருந்தது. குடோன்களில் நேற்று முன்தினம் நள்ளிரவு அரிசி திருட்டு நடந்துள்ளது.சத்தி சாலையில் உள்ள குடோன் கதவின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்த மர்ம கும்பல் 70 குவிண்டால் அரிசி மூட்டைகளை திருடி உள்ளது. அதேபோன்று காளனஹுன்டியில் 70 குவிண்டால் அரிசி, சாம்ராஜ்நகரின் மற்றொரு குடோனில் 50 கிலோ அரிசி மூட்டைகள், ஐந்து கோதுமை மூட்டைகள் திருடப்பட்டுள்ளன.இது குறித்து, சாம்ராஜ்நகர் ஊரக போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் புகார் செய்து உள்ளனர். போலீசாரும் விசாரணையை துவக்கி உள்ளனர்.சாம்ராஜ்நகர் எஸ்.பி., கவிதா அளித்த பேட்டி:சாம்ராஜ்நகர் ஊரக போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, உணவுத்துறை குடோன்களில் அரிசி திருட்டு போனதாக, புகார் வந்துள்ளது. இது குறித்து, சாம்ராஜ்நகர் மற்றும் ஊரக போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவாகியுள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம்.திருட்டு நடந்த குடோன்களில், நேரில் சென்று ஆய்வு செய்த போது, குடோன்களில் எந்த பாதுகாப்பும் இல்லாதது தெரிந்தது. பாதுகாப்பு ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை; கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தவில்லை. அரிசி திருட்டில் குடோன்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்களின் கை வரிசை இருக்கலாம் என, சந்தேகிக்கிறோம். எனவே அவர்களையும் விசாரிக்கிறோம். விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.