கோலார் மாவட்டத்தில் வன நிலம் மீட்பு பணி தீவிரம்
கோலார் : “கோலாரில் 10,௦௦௦ ஏக்கர் வன நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள், விவசாயிகள் அல்ல. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சில நில மாபியாக்கள்,” என, கோலார் மாவட்ட வனத்துறை பாதுகாப்பு தலைமை துணை அதிகாரி செரீனா தெரிவித்தார்.கோலார் வனத்துறை அலுவலகத்தில் அவர் அளித்த பேட்டி:மாவட்ட வன பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஏடுகுண்டலு, ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஏராளமான வனத்துறை நிலங்களை மீட்டார். அதேபோல வனத் துறைக்குச் சொந்தமான நிலங்களை மீட்கப்படும்.கோலார் மாவட்டத்திற்கு வந்த பின், பங்கார்பேட்டையின் காமசமுத்ரா வனப் பகுதியில் 70 ஏக்கர் வன நிலம் மீட்கப்பட்டது. இரண்டு நாட்களாக கோலார் அப்பனி அருகே 200 ஏக்கர் வன நிலம் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு 100 கோடி ரூபாய்.இப்பகுதியில் 618 ஏக்கர் வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதை மீட்கும் பணியின்போது விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துவதாக புகார்கள் எழுகின்றன.போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் வன நிலத்தை ஆக்கிரமித்துள்ளனர். நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டுள்ளோம்.பல இடங்களில் வனத் துறை நிலங்களை ஆக்கிரமித்தவர்கள், விவசாயிகளே இல்லை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நில மாபியா கும்பல்கள் என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நிலத்தை வாங்கியவர்கள் அனைவரும் நன்கு படித்தவர்களே.வனப் பகுதியில் 10,௦௦௦ ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டது. இதுவரை பல இடங்களில் 3,000 ஏக்கர் வன நிலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கும் பணிகள் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.