பெலகாவி கூட்டுறவு வங்கி தேர்தலில் காங்., - பா.ஜ., கூட்டணி தலைவரானார் முன்னாள் எம்.பி., அன்னா சாஹேப் ஜொல்லே
பெலகாவி: பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கியின் தலைவர், துணைத்தலைவர் தேர்தல், நேற்று நடந்தது. இதில் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணி வைத்துக் கொண்டன. பா.ஜ.,வின் அன்னா சாஹேப் ஜொல்லே தலைவராகவும், காங்கிரசின் ராஜு காகே துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கித் தேர்தலை முன்னாள் அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளியும், அவரது சகோதரர்களும் தங்கள் இமேஜ் பிரச்னையாக கருதினர். தங்களின் ஆதரவாளரை தலைவராக்க விரும்பினர். 'லிங்காயத் சமுதாயத்தினரை, டி.சி.சி., வங்கித் தலைவராக தேர்வு செய்வோம்' என, ரமேஷ் ஜார்கிஹோளி அறிவித்திருந்தார். ஆலோசனை காங்கிரஸ், பா.ஜ., இடையே நேரடி போட்டி நிலவியது. ஆனால் திடீரென காங்கிரசும், பா.ஜ.,வும் கூட்டணி வைத்துக்கொண்டன. நேற்று காலையில், கூட்டுறவு வங்கித் தலைவர், துணைத்தலைவரின் தேர்தல் நடப்பதற்கு முன்பு, இயக்குநர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கூட்டணி அமைத்து, 'தலா 30 மாதங்கள் பதவியை பங்கிட்டுக் கொள்ளலாம்' என, முடிவானது. 'தலைவர் பதவிக்கு பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி.,யான அன்னாசாஹேப் ஜொல்லே, துணைத்தலைவர் பதவிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜுகாகே ஆகியோரை தேர்வு செய்யலாம்' என, முடிவு செய்யப்பட்டது. அதன்பின் இருவரும் வேட்புமனுத் தாக்கல் செய்ய, பாலசந்திர ஜார்கிஹோளியின் காரிலேயே சென்றனர். இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பெலகாவி மாவட்டத்தில் ஜார்கிஹோளி, கத்தி, ஜொல்லே குடும்பத்தினருக்கு செல்வாக்கு அதிகம். எந்த தேர்தலாக இருந்தாலும், இம்மூன்று குடும்பங்களுக்கு இடையே தான் போட்டி நடக்கும். அதே போன்று, பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர், துணைத்தலைவர் தேர்தலிலும் போட்டி நிலவியது. யாரும் எதிர்பாராமல் ஜார்கிஹோளி, ஜொல்லே கைகோர்த்ததால், கத்தி குடும்பத்தினருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவசியம் இதுகுறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதாவது: பெலகாவி டி.சி.சி., வங்கித் தலைவராக அன்னாசாஹேப், துணைத்தலைவராக ராஜு காகே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு கட்சிகளும் தலா 30 மாதங்கள் அதிகாரத்தை பகிர்ந்து கொள்கிறோம். இதற்கு முன்பு பா.ஜ.,வினர் எங்களுக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்தனர். இப்போது நாங்கள், பா.ஜ.,வுக்கு விட்டுக் கொடுத்துள்ளோம். எங்களை நம்பி வந்த அன்னா சாஹேபை தலைவராக தேர்வு செய்தோம். தற்போதைய சூழ்நிலையில், கூட்டுறவு வங்கிக்கு அவர் போன்ற தலைவர் அவசியம். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ., - எம்.எல்.ஏ., பாலசந்திர ஜார்கிஹோளி கூறியதாவது: பெலகாவி மாவட்ட கூட்டுறவு வங்கித் தலைவர், துணைத்தலைவர் பதவிகளில் லிங்காயத் சமுதாயத்தினர் அமர்கின்றனர். அன்னா சாஹேப் ஜொல்லேவை, ஜார்கிஹோளி சகோதரர்கள் தோற்கடிப்பர் என, அவப்பிரசாரம் செய்தனர். சகோதரர்களான நாங்கள் ஒன்று சேர்ந்து, அவரை வெற்றி பெற வைத்தோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த வங்கியை 'கர்நாடகாவில் நம்பர் ஒன்' வங்கியாக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.