உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / முன்னாள் எம்.பி., பகவந்த் கூபா துாண்டுதலால் என் மகன் மீது பாலியல் புகார்: பிரபு சவுஹான்

முன்னாள் எம்.பி., பகவந்த் கூபா துாண்டுதலால் என் மகன் மீது பாலியல் புகார்: பிரபு சவுஹான்

பீதர்,: ''பீதர் பா.ஜ., முன்னாள் எம்.பி., பகவந்த் கூபாவின் துாண்டுதலால், எனது மகன் மீது இளம்பெண் பாலியல் புகார் அளித்து உள்ளார்,'' என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான் பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.பீதர் அவுராத் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரபு சவுஹான். இவரது மகன் பிரதீக் சவுஹான். இவர் மீது மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண், கர்நாடக மகளிர் ஆணையத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு, பலாத்கார புகார் செய்தார்.இதுகுறித்து பிரபு சவுஹான் நேற்று அளித்த பேட்டி:எனது மகன் பிரதீக்கிற்கும், மஹாராஷ்டிராவின் நந்தேட் தாலுகா தெக்லுார் கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கடந்த 2023 டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த இளம்பெண், வேறு ஒரு வாலிபருடன் பழகினார். இதுபற்றி எனக்கு தெரியவந்ததும், எங்கள் பஞ்சாரா சமூகத்தின் பெரியவர்களை அழைத்து சென்று, இளம்பெண் வீட்டாரிடம் பேச்சு நடத்தினோம்.'உங்கள் பெண், வேறு ஒருவருடன் பழகுவது பற்றி எனக்கு தெரியும். ஒருவேளை எனது மகனுக்கும், உங்கள் மகளுக்கும் திருமணம் நடந்தால் ஏதாவது சின்ன பிரச்னை ஏற்பட்டால் கூட சரியாக இருக்காது. கடைசி வரை சந்தேகத்துடன் வாழ வேண்டும். இதனால் திருமணம் வேண்டாம்' என்று, பெண்ணின் குடும்பத்தினரிடம், நான் எடுத்து கூறினேன்.

குழுவுக்கு கேப்ட ன்

எங்கள் தரப்பு நியாயத்தை ஏற்று கொண்டதால், திருமண பேச்சு நின்று விட்டது. அதன்பின் எந்த பிரச்னையும் நடக்கவில்லை. தற்போது என் மகன் மீது, அந்த பெண், மகளிர் ஆணையத்தில் புகார் செய்து உள்ளார். இதன் பின்னணியில் பீதர் பா.ஜ., முன்னாள் எம்.பி., பகவந்த் கூபா உள்ளார்.அவர் துாண்டுதலால் தான் என் மகன் மீது, இளம்பெண் புகார் செய்து உள்ளார். பகவந்த் கூபா பொய்யர். பொய் பேசுவது மட்டும் அவரது வேலை. இரண்டு முறை என்னை தேர்தலில் தோற்கடிக்க முயன்றார். என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வேலையை செய்கிறார். எனக்கு எதிராக சதி செய்ய ஒரு கூட்டத்தை சேர்த்து உள்ளார். அந்த குழுவுக்கு, அவர் தான் கேப்டன். நேரடியாக எதுவும் செய்யாமல் தனது ஆதரவாளர்கள் மூலம் அவரது வேலையை காட்டுகிறார். எனக்கு எதிராக அவர் செய்த சதி செயல் பற்றி, கட்சி மேலிடத்திடம் முன்பே புகார் அளித்து உள்ளேன்.எனது 35 ஆண்டு அரசியல் வாழ்க்கையில் எந்த தவறும் செய்தது இல்லை. கட்சியின் ஒழுக்கமான சிப்பாயாக உள்ளேன். எனது முன்னேற்றத்தை பொறுத்து கொள்ள முடியாமல், பகவந்த் கூபா நிறைய தொல்லை கொடுக்கிறார்.

ஆதாரம் உள்ளது

மகளிர் ஆணையம் எனது மகனை விசாரணைக்கு அழைத்தால், அவருடன் நானும் செல்வேன். புகார் அளித்த இளம்பெண், வேறு ஒரு வாலிபருடன் பேசும் வீடியோ கால் அழைப்புகள், குறுந்தகவல் ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை கொடுப்பேன். சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ள தயார். அந்த இளம்பெண்ணை எனது மகள் போன்று தான் நினைத்தேன். ஆனால் அவர் கேட்க கூடாதவர்கள் பேச்சை கேட்டு கொண்டு, எங்களுக்கு எதிராக செயல்படுகிறார். தேவைப்பட்டால் என் மகனை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டும். அரசியல் செய்வது குறிப்பிட்ட கட்டத்திற்குள் மட்டுமே இருக்க வேண்டும். குடும்பம் வரை இழுத்து வர கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.பீதர் அரசியலில் பல ஆண்டுகளாக, பகவந்த் கூபா, பிரவு சவுஹான் இடையில், நீயா, நானா போட்டி உள்ளது. கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு, பீதரில் போட்டியிட பகவந்த் கூபாவுக்கு மீண்டும் 'சீட்' வழங்க கூடாது என்று, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா காலில் விழுந்து, பிரபு சவுஹான் கெஞ்சி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனாலும் பகவந்த் கூபாவுக்கு சீட் கிடைத்தது. தேர்தலில் அவர் தோற்று விட்டார். தனது தோல்வியின் பின்னணியில் பிரபு சவுஹான் இருப்பதாக அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி