உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / லாரிகள் வேலை நிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து... ஸ்தம்பித்தது! டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

லாரிகள் வேலை நிறுத்தத்தால் சரக்கு போக்குவரத்து... ஸ்தம்பித்தது! டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு

கர்நாடகாவில் டீசல் விற்பனை மீதான வரியை, அரசு உயர்த்தியது. இதனால், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால் கொதிப்படைந்த லாரி உரிமையாளர்கள், டீசல் விலை உயர்வை கண்டித்தும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்தும், அவற்றை அகற்ற வேண்டும், ஆர்.டி.ஓ., அதிகாரிகளின் தொல்லையை கட்டுப்படுத்துவது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக எச்சரித்தனர்.தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, ஏப்ரல் 14ம் தேதி வரை அரசுக்கு கால அவகாசம் அளித்திருந்தனர். ஆனால் அரசு பொருட்படுத்தவில்லை. எனவே, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், வேலை நிறுத்த போராட்டத்தை துவக்கினர். 'கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை, போராட்டத்தை நிறுத்த முடியாது' என, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.வேலை நிறுத்த போராட்டத்துக்கு, ஏர்போர்ட் டாக்சி சங்கத்தினர், சரக்கு வாகனங்கள் என, பல்வேறு சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளன. 6 லட்சம் லாரிகள் உட்பட 9 லட்சம் வர்த்தக வாகனங்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.ஜல்லி, மணல், கற்கள், சிமென்ட், இரும்பு உட்பட அனைத்து பொருட்களின் சரக்கு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.மக்களுக்கு தொந்தரவு ஏற்பட கூடாது என்பதால், பால், மருந்துகள், காய்கறி லாரிகள் போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. மாநிலம் முழுதும் போராட்டத்துக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. வேலை நிறுத்தம் காரணமாக, பெங்களூரின் யஷ்வந்த்பூர், தேவராஜ் அர்ஸ் டிரக் டெர்மினல், மார்க்கெட், தேசிய நெடுஞ்சாலைகள் என, கர்நாடகாவின் பல இடங்களில் லாரிகள், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.வெளி மாநிலங்களில் இருந்து வந்த லாரிகள், கர்நாடக எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன. ஓசூரில் லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணியர் வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. லாரிகள் ஓடாத காரணத்தால், தேசிய நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.ஹாசன், மைசூரு, சாம்ராஜ்நகர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் அரசுக்கு எதிராக கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். சங்கங்களுடன், போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி நேற்று நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது. எனவே வேலை நிறுத்தம் எப்போது முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. ஒரு நாள் வேலை நிறுத்தம் என்றாலே, அரசு கருவூலத்துக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.இத்தகைய சூழ்நிலையில், வேலை நிறுத்தம் நான்கைந்து நாட்கள் நீடித்தால், நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும். இதுபோக, அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கர்நாடக லாரி உரிமையாளர்கள் சங்கத்தலைவர் சண்முகப்பா அளித்த பேட்டி:டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியதால், டீசல் விலை அதிகரித்துள்ளது. எங்களின் தொழில் கடுமையாக பாதித்துள்ளது. எனவே, நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். 69 சங்கங்கள் ஆதரவளித்துள்ளன. 6 லட்சம் லாரிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.மற்ற சரக்கு வாகனங்களும், போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. பால், காய்கறிகள், மருந்துகள் போக்குவரத்துக்கு தொந்தரவு இருக்காது. உடனடியாக டீசல் விலையை குறைக்க வேண்டும். டோல் கட்டணத்தை குறைக்க வேண்டும். சோதனைச்சாவடிகளில் லாரி ஓட்டுனர்களுக்கு, போலீசார் கொடுக்கும் தொல்லைகளை கட்டுப்படுத்துவது, எப்.சி., கட்டணத்தை குறைப்பது, வாகன இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைப்பது உட்பட, எங்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இது குறித்து, பல முறை வேண்டுகோள் விடுத்தும், அரசு பொருட்படுத்தவில்லை. எனவே, வேலை நிறுத்தத்தை துவக்கினோம். அரசு பேச்சு நடத்த முன் வந்தால், நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் எங்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை, போராட்டத்தை கைவிட மாட்டோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை