| ADDED : நவ 14, 2025 05:16 AM
உத்தரகன்னடா: பணம் இருந்த அறையை திறக்க முடியாததால், கடுப்படைந்த கொள்ளையர்கள், வங்கிக்கு தீ வைத்துவிட்டு தப்பினர். உத்தரகன்னடா மாவட்டம், எல்லாபுரா தாலுகாவின், உம்மச்சி கிராமத்தில் கர்நாடக கிராமிய வங்கி உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, மர்ம கும்பல் கொள்ளையடிக்கும் நோக்கில், வங்கியின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்ளே புகுந்தது. பணம் இருந்த அறையை திறக்க முயற்சித்தனர். அப்போது சைரன் அலற துவங்கியது. கொள்ளையர்கள் சைரன் சத்தத்தை நிறுத்த முயற்சித்தனர்; முடியவில்லை. போலீசாரிடம் சிக்குவோம் என்ற பீதியால், வங்கிக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடினர். வங்கியில் இருந்து கரும்புகை வருவதை கவனித்த அப்பகுதியினர், போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். போலீசார் ஆய்வு செய்த போது, கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரிந்தது. மர்ம கும்பல் தீ வைத்ததில் வங்கியின் கம்ப்யூட்டர்கள், ஆவணங்கள் எரிந்து கருகின. வங்கியின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவில், கொள்ளையர்கள் முகமூடியுடன் நுழைந்த காட்சி பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். சம்பவ இடத்தை டி.எஸ்.பி., கீதா பாட்டீல், எல்லாபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஹானாபுர் பார்வையிட்டர். 'கொள்ளையர்களை விரைவில் கைது செய்வோம்' என, கூறினர்.