தனியார் தர்பாருக்காக தங்க சிம்மாசனம் தயார்
மைசூரு : தசராவை முன்னிட்டு நடக்கும் மைசூரு மன்னரின் தர்பாருக்காக, தங்க சிம்மாசனம் நேற்று ஜோடிக்கப்பட்டது. மைசூரு தசராவுக்கு இன்னும் ஒரு வாரம் கூட இல்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தசராவில் மிகவும் முக்கியமான நிகழ்வு, மன்னரின் தனியார் தர்பார் தான். பாண்டவர்களிடம் இருந்து வந்ததாக நம்பப்படும் மைசூரு தங்க சிம்மாசனம், பின்னர், விஜயநகர மன்னர்கள் வசம் இருந்தது. அதை தொடர்ந்து உடையார்களிடம் வந்தது. 1610ல் ஸ்ரீரங்கபட்டணத்தில் தசராவை அப்போதைய மன்னர் ராஜ உடையார், அதில் அமர்ந்து ஆட்சி செய்தார். அன்று முதல் மைசூரில் 25வது மற்றும் கடைசி மன்னரான ஜெயசாமராஜ உடையார் உட்பட அக்காலகட்டத்தில் ஆட்சி செய்தவர்களின் தேவைக்கு ஏற்ப, சிம்மாசனம் மாற்றப்பட்டது. மன்னராட்சி ஒழிக்கப்பட்ட பின்னரும், உடையார் மன்னர்களின் சந்ததியினர், தசரா திருவிழாவின்போது, தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து, தர்பார் நடத்தும் பாரம்பரியம் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இத்தகைய சிம்மாசனம், தசராவின்போது ஒன்று சேர்க்கப்படும். நடப்பாண்டு தசராவுக்காக, அரண்மனை தர்பார் மண்டபத்தில், நேற்று காலை கணபதி ஹோமம், சாமுண்டி அம்மன் வழிபாடு ஆகியவை நடத்தப்பட்டன. பின், அரண்மனையின் பாதுகாப்பு அறையில் இருந்து, தனித்தனியாக பிரித்து, திரை சீலைகளால் மூடப்பட்ட, தங்க சிம்மாசனத்தின் 14 பாகங்கள் எடுத்து வரப்பட்டன. கெஜ்ஜெகள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள், காலை 10:15 மணிக்கு ஒன்று சேர்க்க துவக்கினர். ஜோடிக்கப்பட்ட தங்க சிம்மாசனம், திரை சீலையால் மூடப்பட்டது. இவை அனைத்தும் மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மேற்பார்வையில் நடந்தன. அத்துடன், திரை சீலையால் மூடப்பட்டுள்ள தங்க சிம்மாசனத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சிம்மாசனத்தை ஜோடித்த 14 பேரின் மொபைல் போன்களும், அவர்களிடம் இருந்து வாங்கப்பட்டு, இரண்டரை மணி நேரம் தனியாக வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று காலை 8:30 முதல் மதியம் 1:00 மணி வரை, சுற்றுலா பயணியருக்கு, மைசூரு அரண்மனை ஆணையம் தடை விதித்திருந்தது.
வேளாண் தசரா
வேளாண் தசரா துணை கமிட்டி சார்பில் பால் கறக்கும் போட்டி, வரும் 26, 27ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. மாநிலம் அளவிலான இப்போட்டி, மைசூரு ஜே.கே.மைதானத்தில் காலை 6:30 முதல் மாலை 5:30 மணி வரை நடக்கிறது. இதில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்; இரண்டாவது பரிசாக 80 ஆயிரம் ரூபாய்; மூன்றாவது பரிசாக 60 ஆயிரம் ரூபாய்; நான்காவது பரிசாக 40 ஆயிரம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோர், மைசூரு நகர கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.
நாய், பூனை கண்காட்சி
வீட்டு செல்லப்பிராணிகள் கண்காட்சி வரும் 28ம் தேதி காலை 9:00 மணிக்கு ஜே.கே.மைதானத்தில் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்புவோர், வரும் 25ம் தேதி மாலை 6:00 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். போட்டி நடக்கும் இடத்தில் உடனடி பதிவோ அனுமதியோ கிடையாது. இப்போட்டியில் பங்கேற்க, எந்த நாய்கள் கிளப் பதிவும் தேவையில்லை. அனைத்து நாய்கள், செல்லப்பிராணிகளும் வரவேற்கப்படுகின்றன. இதில் பங்கேற்கும் நாய்களின் பாதுகாப்புக்கு, அதன் உரிமையாளர்களே பொறுப்பு. நாய்களுக்கான உணவு, பெல்ட்கள், உரிமையாளர்களே கொண்டு வர வேண்டும். நடுவர்கள் எடுக்கும் முடிவே இறுதியானது. பங்கேற்கும் அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். இதில் பதிவு செய்ய விரும்புவோர், மைசூரு நகர கால்நடை மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.
ட்ரோன் ஷோ
சுற்றுலா பயணியரை கவரும் வகையில் கடந்தாண்டு ட்ரோன் ஷோ நடத்தப்பட்டது. அதுபோன்று இந்தாண்டும் செப்., 28, 29, அக்., 1, 2ம் தேதிகளில் ட்ரோன் ஷோ நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டு 1,500 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தாண்டு 3,000 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. அதுபோன்று மத்திய பாதுகாப்பு துறை ஒப்புதலின்படி, செப்., 27 மற்றும் அக்., 1ம் தேதிகளில் விமான சாகச கண்காட்சி நடத்தப்பட உள்ளது.
136 கி.மீ., மின் அலங்காரம்
அரண்மனை நகரை இரவு நேரத்தில் ஜொலிக்க வைக்க, நகரின் 136 கி.மீ., நீள சாலைகளுக்கும்; 118 போக்குவரத்து சதுக்கங்களிலும் மின் விளக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதற்காக சாமுண்டி மின் வினியோக நிறுவனம் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், மின்சார கம்பங்கள் அருகில் யாரும் செல்ல வேண்டாம். அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளை யாரும் தொடவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக மழை நேரத்தில் அருகில் செல்ல வேண்டாம். நகரின் முக்கிய சாலைகள், சதுக்கங்களில் மின் விளக்குள் பொருத்தப்பட்டு உள்ளதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் ஜாக்கிரதையாக செல்ல வேண்டும். திருவிழாவின்போது, மின்சாரம் தொடர்பாக 24 மணி நேரமும் இயங்கும், 1912 உதவி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.