உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிவில், மெக்கானிக் கல்வி கட்டணம் அரசு இன்ஜி., கல்லுாரிகள் குறைப்பு

சிவில், மெக்கானிக் கல்வி கட்டணம் அரசு இன்ஜி., கல்லுாரிகள் குறைப்பு

பெங்களூரு: மாநிலத்தில் உள்ள கல்லுாரிகளில் வரும் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இம்முறை மாணவர்கள் பலரும் பொறியியல், கலை, அறிவியல், மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.பொறியியலில் சேர விரும்பும் மாணவர்கள் ஏ.ஐ., கணினி போன்ற துறைகளையே அதிகம் தேர்வு செய்கின்றனர். இதற்கு காரணம் வளர்ந்து வரும் ஐ.டி., தொழில்நுட்பமே. இதனால், பொறியியல் துறைகளில் உள்ள மற்ற படிப்புகளான மெக்கானிக்கல், சிவில் ஆகியவற்றை படிப்பதில் மாணவர்கள் கடந்த சில ஆண்டுகளாக ஆர்வம் காட்டவில்லை.இதனால், சில தனியார் கல்லுாரிகளில் மெக்கானிக்கல், சிவில் துறைகள் மூடப்பட்டன. இதை கருத்தில் கொண்டு, கடந்த 9ம் தேதி, உயர்கல்வி துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் கல்லுாரி தரப்பில் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் சுதாகர் பேசியதாவது:கடந்த சில ஆண்டுகளாகவே மெக்கானிக்கல், சிவில், ஆட்டோ மொபைல் துறைகளில் சேருவதற்கு மாணவர்கள் விருப்பம் காட்டுவதில்லை. இதே நிலைமை தொடர்ந்தால் இந்த துறைகள் காணாமல் போகும் அபாயம் ஏற்படும். இதை எப்படியாவது தடுக்க வேண்டும்.எனவே, அரசு பொறியியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கும் துறைகளில், கல்வி கட்டணம் குறைக்கப்படும். எவ்வளவு சதவீதம் குறைக்கப்படும் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும்.மேலும், தனியார் கல்லுாரிகளும் விருப்பப்பட்டால் கல்வி கட்டணத்தை குறைத்து கொள்ளலாம். ஆனால், அதற்கு முன் கர்நாடக தேர்வு ஆணையத்திடம் ஆலோசிப்பது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிலையில், கே.யு.பி.இ.சி.ஏ., எனும் கர்நாடக உதவி பெறாத தனியார் பொறியியல் கல்லுாரிகள் சங்கமும், கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள துறைகளின், கல்வி கட்டணத்தை குறைக்க முடிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி