ரூ.200 கோடி அரசு நிலம் அபகரிப்பு
பெங்களூரு: அரசு அதிகாரிகளே, 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு நிலத்தை அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, லோக் ஆயுக்தாவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு தெற்கு தாலுகாவில், அரசுக்கு சொந்தமான நிலம், சட்டவிரோதமாக செல்வாக்குமிக்க நபர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மோசடியில், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விற்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 200 கோடி ரூபாய். இதுகுறித்து, பா.ஜ., பிரமுகர் ரமேஷ், நேற்று லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தார். புகாரில் கூறியிருப்பதாவது: சில ஊழல் அதிகாரிகள், அரசு நிலத்தை சட்டவிரோதமாக விற்றுள்ளனர். இதனால் அரசுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த ஊழலில் பெங்களூரு நகர் மாவட்ட கலெக்டர் அலுவலக உதவியாளர் பிரஷாந்த் கவுடா, தாசில்தார் சீனிவாஸ், துணை தாசில்தார் நாகராஜ் உட்பட, பலருக்கு தொடர்புள்ளது. இதுகுறித்து, விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து, அரசு நிலத்தை மீட்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.