சுட்டெரிக்கும் கோடை வெயில் அரசு ஆபீஸ் பணி நேரம் மாற்றம்
பெங்களூரு: ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு, வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில், அரசு அலுவலக பணி நேரத்தை மாற்றி, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சில மாவட்டங்களில், வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. வெப்ப நிலை 40 டிகிரி செல்ஷியஸை தாண்டியுள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, அலுவலக பணி நேரத்தை மாற்றும்படி கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது.இதை ஏற்றுக் கொண்ட அரசு, வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள, பாகல்கோட், கலபுரகி, பெலகாவி, விஜயபுரா ஆகிய மாவட்டங்களில் அரசு அலுவலக பணி நேரத்தை மாற்றியுள்ளது.இதுகுறித்து, அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:பெலகாவி, கலபுரகி, விஜயபுரா, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிப்படைகின்றனர்.இவர்களின் நலனை கருதி, பணி நேரம் காலை 8:00 முதல், மதியம் 1:30 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், அரசு அலுவலகங்களில் இந்த நேரத்தில் ஊழியர்கள் பணியாற்றலாம். பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் ஏற்படக் கூடாது. அவசர சந்தர்ப்பங்களில், மேலதிகாரிகள் உத்தரவிட்டால், நேரம் பார்க்காமல் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.