ஓட்டுநர்களுக்கு ஹெல்த் கார்டு கட்டாயமாக்க அரசு யோசனை
பெங்களூரு: அரசு பஸ் ஓட்டுநர்கள் உட்பட, அனைத்து வாகன ஓட்டுநர்களுக்கு 'ஹெல்த் கார்டு' கட்டாயமாக்க, அரசு ஆலோசிக்கிறது. சமீப நாட்களாக, கர்நாடகாவில் மாரடைப்பு இறப்புகள் அதிகரிக்கின்றன. இதற்கு காரணம் என்ன என்பதை கண்டுபிடிக்க, ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை டாக்டர்கள் அடங்கிய, தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு அமைத்தது. டாக்டர்கள் குழுவும், ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு அதிகரிக்கிறது. இதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, அறிக்கையில் பரிந்துரை செய்யப் பட்டுள்ளது. வல்லுநர்கள் அறிக்கையின்படி, ஓட்டுநர்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க, மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 'ஹெல்த் கார்டு' கட்டாயமாக்க, அரசு தயாராகி வருகிறது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு அதிகரிப்பதாக, வல்லுநர் குழுவினர் எச்சரித்துள்ளனர். இதை கட்டுப்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. ஆட்டோ, பஸ், வாடகைக்கார் ஓட்டுநர்களுக்கு, ஹெல்த் கார்டு கட்டாயமாக்க ஆலோசிக்கிறது. ஓட்டுநர்களுக்கு இ.சி.ஜி., ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை செய்து, அவர்கள் ஆரோக்கியமாக உள்ளார்களா, இல்லையா என்பது குறித்து, ஹெல்த் கார்டு வழங்கப்படும். ஓட்டுநர் உரிமம் பெறும்போது, புதுப்பிக்கும்போது, எப்.சி., சான்றிதழ் பெறும்போது, ஹெல்த் கார்டு அளிக்க தயாராகிறோம். இதுகுறித்து, போக்குவரத்துத் துறை, போலீஸ் துறையுடன் ஆலோசிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை சார்பில் ஹெல்த் கார்டு வழங்குவதா அல்லது வேறு இடங்களில் சான்றிதழ் பெறும்படி, ஓட்டுநர்களுக்கு உத்தரவிடுவதா என்பதை, இன்னும் முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். ஹெல்த் கார்டு கட்டாயமாக்கும் அரசின் திட்டத்தை, ஓட்டுநர்கள் வரவேற்றுள்ளனர்.