நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் அரசு
பெங்களூரு: நிதி நிறுவனங்களுடன் இணைந்து அரசு செயல்படுவதாக, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா குற்றம் சாட்டினார்.பெங்களூரில் அவர் அளித்த பேட்டி:நிதி நிறுவனங்கள் கொடுக்கும் நெருக்கடியில் இருந்து மக்களை மீட்க வேண்டிய அரசு, நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இது துரதிர்ஷ்டவசமானது. வாக்குறுதித் திட்டங்களால், மக்கள் வளமாக உள்ளனர் என்று, ஆட்சியில் இருப்போர் கூறுகின்றனர். ஆனால் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும் மக்கள், அவர்கள் கொடுக்கும் தொல்லையால் நொந்து போகின்றனர்.ஏழைகள், பெண்கள், கூலி தொழிலாளர்கள் நிலைகுலைந்து போய் உள்ளனர். தற்கொலைகளும் அரங்கேறுகின்றன. இதனை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அட்டூழியங்களை அனுமதிப்பதை விட்டுவிட்டு, மக்களுக்கு உதவி செய்ய அரசு முன்வர வேண்டும். வளர்ச்சி பணிகளுக்கு நிதி ஒதுக்காததால், எம்.எல்.ஏ.,க்கள் கையை கட்டி கொண்டு அமைதியாக உள்ளனர். விவசாயிகள் குறைகளை அரசு கேட்பதே இல்லை.டில்லியில் எங்கள் கட்சி 27 ஆண்டுகளுக்கு பின், ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. ஊழல் செய்த ஆம் ஆத்மி கட்சிக்கு டில்லி மக்கள் பாடம் கற்பிப்பர். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறந்த பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு சாதகமான மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான சிறந்த பட்ஜெட் என்று பிரதமர் மோடி பாராட்டி உள்ளார். 12 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கும் முடிவு நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிதும் பயன் அளித்து உள்ளது. மத்திய பட்ஜெட் குறித்து சித்தராமையாவிடம் இருந்து, நல்ல கருத்துகளை எதிர்பார்க்கவே முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.