பச்சை மிளகாய் காளான் கிரேவி
ஹிந்துக்கள் வீடுகளில் புரட்டாசி மாதம் என்றாலே, அசைவ உணவுகளுக்கு நோ என்று சொல்லி விடுவர். மாதம் முழுதும் விதவிதமான சைவ உணவுகள் தான். ஆனாலும் அசைவ உணவுகளை அதிகம் சாப்பிட்டு பழகியவர்களுக்கு, ஒரு மாதம் முழுதும் அசைவம் சாப்பிடாமல் இருப்பது கஷ்டமாக இருக்கும். இதனால் அசைவ சுவையில், சைவத்தில் செய்யும் நிறைய குழம்புகள், கிரேவி உள்ளன. இதில் ஒன்றான பச்சை மிளகாய் காளான் கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம். செய்முறை: மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, புதினா இலை, இஞ்சி, தோல் உரித்த பூண்டு, முந்திரி பருப்பு, பச்சை மிளகாய் சேர்த்து, தேவையான தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும். காளான் சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, மஞ்சள் பவுடர், அரைத்த விழுதை சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின், அடுப்பை ஆன் செய்து கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். கலந்து வைத்துள்ள காளான் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக வேக வைக்க வேண்டும். கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்து வேக வைத்தால், சுவையான பச்சை மிளகாய் காளான் கிரேவி தயார். காளானை வைத்து பிரியாணி, குழம்பு என்று எப்போதும் ஒரே மாதிரி வைப்பதை தவிர்த்துவிட்டு, இந்த கிரேவியை புதிதாக செய்து பாருங்கள். வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர். சுட, சுட சாதம், தயிர் சாதத்திற்கு சூப்பரான காம்பினேஷனாகவும், அசைவ சுவையில் காரசாரமாகவும் இருக்கும். - நமது நிருபர் -