உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படாது: முதல்வர் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் வாபஸ்

ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படாது: முதல்வர் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் வாபஸ்

பெங்களூரு: “சிறு வணிகர்களுக்கு லட்சக்கணக்கில் விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படாது,” என, முதல்வர் சித்தராமையா உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து, நாளை சுதந்திர பூங்காவில் நடக்க இருந்த ஆர்ப்பாட்டத்தை வாபஸ் பெறுவதாக கர்நாடக மாநில தொழிலாளர் கவுன்சில் தலைவர் ரவிஷெட்டி பைந்துார் அறிவித்துள்ளார். பெங்களூரில் உள்ள பால், பேக்கரி, ஜூஸ், சிகரெட் உள்ளிட்ட சிறிய கடைகளின் உரிமையாளர்களுக்கு, கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யு.பி.ஐ., செயலிகள் மூலம் பெறப்பட்ட தொகையை கணக்கிட்டு, மாநில வணிக வரித்துறை அதிகாரிகள் ஜி.எஸ்.டி., செலுத்துமாறு நோட்டீஸ் வழங்கினர். பலருக்கும் லட்சக்கணக்கில் வரி விதித்தனர். எதிர்ப்பு இதை கண்டித்து, மாநிலம் முழுதும் உள்ள தனியார் பால் பூத்கள், சில்லறை கடைகள் நேற்றும், இன்றும் இயங்காது; நாளை அனைத்து சிறு வணிகர்களும் தங்கள் கடைகளை மூடிவிட்டு, குடும்பத்துடன் பெங்களூரு சுதந்திர பூங்காவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதே போல, நேற்று நகரில் உள்ள சில பகுதிகளில் உள்ள தனியார் பால் பூத்கள் இயங்கவில்லை. லெமன் டீ, பிளாக் டீ என பால் கலக்காத பொருட்களே சில டீ கடைகளில் விற்கப்பட்டன. வியாபாரிகள் தங்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்து எதிர்ப்புகளை பதிவு செய்தனர். 'வணிகர்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீசுக்கு காரணம் மாநில அரசே' என, பா.ஜ.,வினர் குற்றஞ்சாட்டினர். இது மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. இதையடுத்து, நேற்று மாலை தன் கிருஷ்ணா அலுவலகத்தில், வணிக வரித்துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் முதல்வர் சித்தராமையா பேச்சு நடத்தினார். தங்கள் கோரிக்கைகளை முதல்வரிடம் வணிகர்கள் கூறினர். குழப்பம் இதையடுத்து, முதல்வர் சித்தராமையா பேசியதாவது: ஜி.எஸ்.டி., நோட்டீஸ் குறித்து வணிகர்களிடையே குழப்பம் நிலவுகிறது. கடைகளில் வைக்கப்பட்டுள்ள கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்களுடன் இணைப்பில் உள்ள வங்கிக்கணக்கில், வியாபாரம் மட்டுமின்றி தனிப்பட்ட பரிவர்த்தனைகளையும் செய்துள்ளனர். இதற்கும் சேர்த்து ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ளது. பால், காய்கறி, இறைச்சி, பழங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு வரி கிடையாது. இந்த பொருட்களை விற்பனை செய்யும், வணிகர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டாலும், அவர்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு வணிக வரித்துறை அதிகாரிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர். ஆதரவு மாநில அரசு சிறு வணிகர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஜி.எஸ்.டி., மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. ஜி.எஸ்.டி., வசூலில் நாட்டிலேயே இரண்டாவது இடத்திலே கர்நாடகா உள்ளது. எனவே, வரி வசூலில் மாநில அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்படும். வணிகர்களின் வரி தொடர்பான சந்தேகங்களை தீர்க்க 'ஹெல்ப் லைன்' வழங்கப்படும். கடந்த நிதியாண்டுகளை கணக்கிட்டு, கர்நாடகாவில் 9,000 வணிகர்களுக்கு, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், வணிகர்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே, ஜி.எஸ்.டி., வரி வசூலிக்கப்படாது. ஆனால், அனைவரும் கட்டாயம் ஜி.எஸ்.டி., பதிவு செய்ய வேண்டும். இதற்கு வணிகர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். வியாபாரிகளின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால், நாளை நடக்க இருந்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக, வணிகர்கள் கூறி உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார். நம்பிக்கை ஜி.எஸ்.டி., விவகாரத்தில் முதல்வர் எடுத்த முடிவு பாராட்டுக்குரியது. அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது; வணிகர்களுக்கு வழங்கிய ஜி.எஸ்.டி., தள்ளுபடி செய்யப்பட்டது, வணிகர்களுக்கு மாநில அரசின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. எம்.ஜி.பாலகிருஷ்ணா, தலைவர், கர்நாடக வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !