உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆண்டுகள் சபரிமலை செல்லும் குருசாமி தேவராஜ்

 ஆண்டுகள் சபரிமலை செல்லும் குருசாமி தேவராஜ்

சபரிமலைக்கு, 18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலாக தொடர்ந்து செல்லும் அய்யப்ப பக்தர்கள், 'குருசாமி' என, அழைக்கப்படுகின்றனர். இவர்கள் அய்யப்ப பக்தியில் ஆழ்ந்த அனுபவம் உள்ளவர்களாக அறியப்படுகின்றனர். புதிய பக்தர்களுக்கு மாலை அணிவிக்கவும், யாத்திரையின் போது வழிகாட்டுதல்கள் வழங்கவும் தகுதி உடையவர்களாக மாறுவதுடன், மிகவும் மதிக்கப்படுகின்றனர். பெங்களூரின் சிவன்ஷெட்டி கார்டனை சேர்ந்தவர் தேவராஜ், 71. வி.ஏ.பி.எஸ்., என்ற, வாபர் அய்யப்ப பஜனை சபா அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். தனது அறக்கட்டளை மூலம் அய்யப்பனுக்கு மாலை அணிவிக்கும் புதிய பக்தர்களை சபரிமலைக்கு அழைத்து சென்று, அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குகிறார். தனது சபரிமலை அனுபவம் குறித்து தேவராஜ் கூறியதாவது: முதல்முறையாக என், 21வது வயதில், சபரிமலை செல்வதற்கு மாலை அணிந்தேன். அப்போது முதல் தற்போது வரை, 48 ஆண்டுகள் சபரிமலைக்கு சென்று உள்ளேன். இடையில் இரண்டு ஆண்டுகள் என்னால் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. அய்யப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருப்பது, சாதாரண விஷயம் இல்லை. 48 நாட்களும் விரதத்தை கடுமையாக கடைப்பிடிக்க வேண்டும். எங்கள் அறக்கட்டளையில் வந்து மாலை அணியும் பக்தர்கள், 48 நாட்கள் கட்டாயமாக விரதம் இருந்தால் தான், சபரிமலைக்கு அழைத்து செல்வோம். தினமும் மாலை, 6:00 முதல் இரவு 9:00 மணி வரை பஜனை நடத்துகிறோம். மனம் உருகி அய்யப்பனை வேண்டினால், நினைத்த காரியங்கள் நிறைவேறும். வரும், 6ம் தேதி சிவாஜிநகர் தண்டு மாரியம்மன் கோவிலில் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்கு, 60 க்கும் மேற்பட்டோர் புறப்படுகிறோம். ரயிலில் தான் பயணம் செய்கிறோம். முதலில் எரிமேலி சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்குவோம். எங்கள் அறக்கட்டளை சார்பில், 3,000 அய்யப்ப பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குகிறோம். பெரும்பாலான அய்யப்ப பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் செய்து விட்டு, ஆரியங்காவு அய்யப்பன் கோவில் உள்ளிட்ட மற்ற கோவில்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், நாங்கள் சபரிமலையில் அய்யப்பனை பார்த்து விட்டு, நேராக பழனி சென்று விடுவோம். முருகனை தரிசித்து விட்டு வீட்டிற்கு வந்து விடுகிறோம். சபரிமலையில் இருந்து நேராக பழனி சென்றால் தான், 48 நாட்கள் மேற்கொண்ட கடுமையான விரதத்திற்கு பலன் கிடைக்கும் என்பது, எங்கள் நம்பிக்கை. என்னுடன் வரும் அய்யப்ப பக்தர்களுக்கு முடிந்த வரை செலவு அதிகம் ஆகாமல் பார்த்து கொள்கிறேன். நான் முதல் முறை மாலை அணிந்து சபரிமலை சென்ற போது, 250 ரூபாய் தான் செலவானது. தற்போது ஒரு ஆளுக்கு 3,000 ரூபாய் வரை ஆகிறது. மீதி பணம் இருந்தாலும் திருப்பி கொடுத்து விடுகிறேன். என் வாழ்வில் அனைத்தையும் கொடுத்தது அய்யப்பன் தான். அவரை தினமும் மனம் உருகி வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்