உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கிராமத்தினர் கனவில் தோன்றிய ஹனுமன்

 கிராமத்தினர் கனவில் தோன்றிய ஹனுமன்

தார்வாட் மாவட்டம் குருபகட்டி கிராமத்தில் அமைந்துள்ளது ஜபவேதிகா ஆஞ்சநேயர் கோவில். புராணங்களின்படி, 500 ஆண்டுகளுக்கு முன், குருபகட்டி கிராமம் அருகேயுள்ள முலமுத்தா கிராமத்தில், ஆஞ்சநேயர் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்காக, ஹனுமன் சிலை வடிக்க குருபகட்டி கிராமத்தில் இருந்து பெரிய பாறை ஒன்று, மாட்டு வண்டியில் கொண்டு செல்லப்பட்டது. குருபகட்டியில் இருந்து புறப்பட்ட போது, குறிப்பிட்ட இடத்தில் மாட்டு வண்டி செல்ல முடியாமல் சிரமப்பட்டது. கிராமத்தினர் பல வழிகளில் முயற்சித்தும், அந்த இடத்தில் இருந்து மாட்டு வண்டி நகரவில்லை. இதனால், குருபகட்டி கிராமத்தினர் தங்கள் ஊரிலேயே ஆஞ்சநேயர் கோவிலை கட்ட வேண்டும் என்றனர். முலமுத்தா கிராமத்தினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்றைய தினம் முலமுத்தா கிராமத்து மக்களின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'குருபகட்டியில் தான் கோவில் கட்டப்பட வேண்டும்' என்றாராம். ஒரே நேரத்தில் அனைவரின் கனவிலும் இதேபோல ஆஞ்சநேயர் தெரிவித்த தாகக் கூறப்படுகிறது. ஆச்சரியப்பட்ட மக்கள், ஆஞ்நேயரின் கட்டளையின்படி குருபகட்டியிலேயே கோவில் கட்ட சம்மதித்தனர். அதேபோன்று குருபகட்டி கிராமத்தை சேர்ந்த தேஷ்பாண்டே என்பவரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர், 'என்னுடைய தோற்றம் இந்த பாறையில் பதிந்துள்ளது. எனவே, அந்த பாறையை அந்த நிலத்தில் இருந்து அகற்ற வேண்டாம். அங்கேயே தனக்கு கோவில் கட்டி வழிபடும்படி' கூறினாராம். இதை கிராமத்தில் உள்ள மற்றவர்களிடம் கூறி, இப்போது கோவில் அமைந்துள்ள இடத்திலேயே கோவில் கட்டினார். தற்போது கோவிலில் பெரிய காலணி வைத்து பூஜிக்கப்படுகிறது. இந்த காலணியையும், ஆரஞ்சு நிற ஆடை, ஜரிகையுடன் கூடிய வேஷ்டி அணிந்து, கிராமத்தை வலம் வந்து, தீய சக்தியில் இருந்து கிராமத்தினரை ஆஞ்சநேயர் பாதுகாப்பதாக, கிராம மக்கள் நம்புகின்றனர். சிற்ப வேலைபாடு இக்கோவிலில் குடிகொண்டிருக்கும் ஆஞ்சநேயர், அரிய மற்றும் சக்தி வாய்ந்தவராக கருதப்படுகிறார். ராவணனின் சகோதரன் அக் ஷ குமாரன் என்ற அரக்கனை தன் காலால் மிதித்து கொன்றபடி காட்சி அளிக்கிறார். தன் வலது கையில் சவுகந்திகா மலர் வைத்துள்ளார். இதன் மூலம் புனிதம், பக்தியை எடுத்துரைக்கிறது. இச்சிலையின் தோளில் ஒரு புனித நுால் (யக்ஞோபவீதம்), தலையில் ஒரு சிகாவும் (முடி கட்டி) இடம் பெற்றுள்ளன, இது வேத ஒழுக்கத்தையும், ஆன்மிக வலிமையையும் எடுத்துக்காட்டுகிறது. அவரின் வாலின் முனையில் கட்டப்பட்ட மணி, விழிப்புணர்வு, தெய்வீக சக்தியை குறிக்கிறது. ஹனுமனின் இந்த வடிவம் மிகவும் அரிதானதாகவும், ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது.

எப்படி

செல்வது?

 பெங்களூரில் இருந்து ரயிலில் செல்வோர், தார்வாட் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 19 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  பஸ்சில் செல்வோர், தார்வாட் பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து, 18 கி.மீ., தொலைவில் உள்ள கோவிலுக்கு பஸ், டாக்சியில் செல்லலாம்.  திருவிழா: ஹனுமன் ஜெயந்தி, மாதவ நவமி, கார்த்திகை தீப உத்சவம், ஷ்ரவண மாத பூஜைகள், ஆண்டு விழா - நமது நிருபர் - - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ