போலி மருத்துவர்களுக்கு கம்பி சுகாதார துறை அறிவிப்பு
பெங்களூரு: 'போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டால் சிறைத்தண்டனை உறுதி' என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கர்நாடகாவில் பல மாவட்டங்களிலும் போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதைத் தடுக்க ஆயுஷ் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்க மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை திட்டம் வகுத்துள்ளது. போலி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபருக்கு முதன்முறை 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதே நபர் இரண்டாவது முறை சிக்கினால் அவர் கைது செய்யப்படுவார். அவருக்கு 2.50 லட்சம் ரூபாய் அபராதம், ஒரு ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் விதிக்கும். மூன்றாவது முறை சிக்கினால் 5 லட்சம் ரூபாய் அபராதம், மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும். கர்நாடக தனியார் மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் கிளினிக்குகள் நடத்தினால் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதுடன், சம்பந்தப்பட்ட மருத்துவ நிறுவனம் உடனடியாக மூடப்படும். மாவட்ட அளவிலான போலி மருத்துவர்களை கண்டறிய கலெக்டர் தலைமையில் குழு உருவாக்கப்படும். குழுவில், மூத்த போலீஸ், சுகாதாரத்துறை, ஆயுஷ், சமூக ஆர்வலர், வக்கீல்கள் இடம் பெற்றிருப்பர். இந்த குழுவினர் மாதம் ஒரு முறை போலி மருத்துவர்கள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறைக்கு சமர்ப்பிப்பர். இதுகுறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''மாநிலத்தில் போலி மருத்துவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றனர். உரிய அனுமதியின்றி மருத்துவமனைகள் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். ''இதை மாவட்ட அளவிலான குழுவினர் கண்டுபிடிப்பர். போலி மருத்துவர் சிகிச்சை அளித்ததால் கலபுரகியில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படுகிறது,'' என்றார்.