கனவு நாயகனை காண சென்று கனவாகி போனவர்கள் த ங்க வ ய ல் பெண் உட்பட 11 பேர் பற்றி உருக்கமான தகவல்
பெங்களூரு: ஐ.பி.எல்., வரலாற்றில் முதன்முறையாக ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.கோப்பையுடன் வரும் தங்கள் கனவு நாயகன் விராத் கோலி உள்ளிட்ட அணி வீரர்களை காண இளம்பெண்கள் ஆர்வமுடன் பெங்களூரு சின்னசாமி மைதானம் நோக்கி நேற்று முன்தினம் படையெடுத்தனர்.விதான் சவுதாவில் நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு, ஆர்.சி.பி., அணியினர் சின்னசாமி மைதானத்துக்கு வந்தனர். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, விபரீதம் நேர்ந்தது. தமிழகத்தின் உடுமலையை சேர்ந்த பெண் உட்பட 11 பேர் கனவு நாயகனை பார்க்காமலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த 11 பேர் பற்றிய தகவல்கள் வருமாறு:காமாட்சி தேவி, 29:தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர். கடந்த 8 ஆண்டுகளாக பெங்களூரு ராமமூர்த்திநகரில் வசிக்கிறார். கல்லுாரி படிப்பை முடித்ததும் அமேசான் நிறுவனத்தில் 'பிராசஸ் அனலிஸ்ட்' ஆக வேலை செய்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை மூர்த்தி. தாய் ராஜலட்சுமி. இவர்களுக்கு காமாட்சி தேவி ஒரே மகள். மூர்த்தி உடுமலைபேட்டை விவேகானந்தா வித்யாலயா பள்ளியின் தாளாளராக உள்ளார். தோழிகளுடன் சின்னசாமி மைதானத்திற்கு சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி காமாட்சி தேவி உயிரிழந்துள்ளார்.திவ்யான்ஷி, 14:பெங்களூரின் எலஹங்கா கட்டிகேனஹள்ளியை சேர்ந்தவர். இவரது தந்தை சிவகுமார், தாய் அஸ்வினி. தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த திவ்யான்ஷி, விராத் கோலியின் தீவிர ரசிகை. நேற்று முன்தினம் காலையில் பள்ளிக்கு கிளம்பிவிட்டார். ஆர்.சி.பி., அணி கோப்பையுடன் பெங்களூரு வருகிறது என்று அறிந்ததும், தன் பெற்றோருடன் சேர்ந்து விராத் கோலியை பார்ப்பதற்காக சின்னசாமி மைதானம் சென்றுள்ளார். ஆனால் அவரது வாழ்க்கையில் விதி விளையாடி உள்ளது.அக் ஷதா, 26மங்களூரு முல்கியை சேர்ந்தவர். சி.ஏ., படித்துள்ளார். அந்த படிப்பில் தங்கப்பதக்கமும் பெற்றவர். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு அக் ஷய் என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு பின் பெங்களூரு கம்மனஹள்ளியில் வசித்தனர். சின்னசாமி மைதானத்திற்கு தம்பதி ஒன்றாக சென்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி இருவரும் தனித்தனியாக பிரிந்தனர். நெரிசலில் சிக்கியதால் அக் ஷதா இறந்துவிட்டார். அவர் அணிந்திருந்த ஆர்.சி.பி., ஜெர்சியை வைத்து தான் அக் ஷதாவை, கணவர் அக் ஷய் அடையாளம் கண்டுள்ளார்.சஹானா, 21கோலார் தங்கவயல் பதமகனஹள்ளி கிராமத்தின் சுரேஷ் பாபு, மஞ்சுளா தம்பதியின் மகள். இன்ஜினியரிங் படிப்பை படித்து முடித்துவிட்டு பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். தோழிகளுடன் மைதானத்திற்கு சென்றபோது உயிரை பறிகொடுத்துள்ளார்.சின்மயி ஷெட்டி, 20தட்சிண கன்னடாவின் உப்பினங்கடியை சேர்ந்தவர். இவரது தந்தை கருணாகர் ஷெட்டி. தாய் பூஜா. பெங்களூரின் தொட்டகல்லசந்திராவில் வசித்தனர். கனகபுரா சாலையில் உள்ள தனியார் கல்லுாரியில் இன்ஜினியரிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். தட்சிண கன்னடா மாவட்டத்தின் பாரம்பரியமான யக் ஷகானா கலை மீது கொண்ட ஆர்வத்தால், யக் ஷகானா வேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்தார்.மனோஜ்குமார், 19துமகூரின் குனிகல்லை சேர்ந்தவர். சில ஆண்டுகளாக பெற்றோருடன் பெங்களூரு எலஹங்காவில் வசித்தார். இவரது தந்தை தேவராஜ் பானிபூரி விற்பனை செய்கிறார். எலஹங்கா ரெசிடென்ஸ் கல்லுாரியில் பி.யு., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.பூமிக், 19பெங்களூரின் நாகசந்திராவை சேர்ந்தவர். நண்பர்களுடன் சின்னசாமி மைதானத்திற்கு வந்தபோது நெரிசலில் சிக்கி இறந்துள்ளார்.பிரஜ்வல், 22சிக்கபல்லாபூரை சேர்ந்தவர். இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், நேற்று முன்தினம் வேலைக்கான நேர்காணலுக்கு பெங்களூரு வந்ததும், நேர்காணலை முடித்துவிட்டு மைதானம் அருகே சென்று உயிரை விட்டதும் தெரிய வந்துள்ளதுபூர்ண சந்திரா, 25மாண்டியாவின் கே.ஆர்.பேட் ராயசமுத்திரா கிராமத்தை சேர்ந்தவர். மைசூரில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயம் நடந்திருந்தது. குடும்பத்தினருடன் சொல்லாமல் நேற்று முன்தினம் பெங்களூரு வந்திருந்தார். வாழ்க்கை துவங்க வேண்டிய நேரத்தில், அவரது எமதர்மன் அழைத்து உள்ளார்.ஷரவன், 20சிக்கபல்லாபூர் சிந்தாமணி தாலுகா குருதஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர். பெங்களூரு அம்பேத்கர் கல்லுாரியின் பல் மருத்துவ மாணவர். இவரும் நண்பர்களுடன் மைதானத்திற்கு சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரை இழந்துள்ளார்.சிவலிங்கா, 17யாத்கிர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரது தந்தை திம்மப்பா. தாய் சாந்தம்மா கும்பாரா. சில ஆண்டுகளாக பெங்களூரின் எலஹங்காவில் வசிக்கின்றனர். அரசு கல்லுாரியில் பி.யு., இரண்டாம் ஆண்டு சிவலிங்கா படித்தார். சின்னசாமி மைதானத்திற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது மொபைல் போனுக்கு பெற்றோர் அழைத்தனர். மொபைலை எடுத்து பேசிய ஒருவர், 'உங்கள் மகன் இறந்துவிட்டார்' என்று தகவல் கூறி உள்ளார்.