உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தர்மஸ்தலா வழக்கு பற்றி சட்டசபையில் அனல்; ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி கடும் வாக்குவாதம் 

தர்மஸ்தலா வழக்கு பற்றி சட்டசபையில் அனல்; ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி கடும் வாக்குவாதம் 

பெங்களூரு: தர்மஸ்தலா வழக்கை பற்றி சட்டசபையில் விவாதித்த போது, ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. கர்நாடக சட்டசபையில் நேற்று, தர்மஸ்தலா வழக்கில் இதுவரை நடந்த விசாரணை குறித்து, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூற வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் வலியுறுத்தி பேசினார். பரமேஸ்வர்: தர்மஸ்தலா கோவிலுக்கு, 800 ஆண்டு வரலாறு உள்ளது. கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இது உணர்ச்சிகரமான விஷயம் என்பதால் கவனமாக செய்தி வெளியிடும்படி, ஊடகத்தினருக்கு வேண்டுகோள் வைக்கிறேன். வழக்கை மிகுந்த எச்சரிக்கையாக அரசு கையாளுகிறது. முதலில் எஸ்.ஐ.டி., விசாரணைக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, இப்போது எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல. விசாரணை நியாயமாக நடக்க வேண்டுமா, வேண்டாமா என நீங்களே கூறுங்கள். விசாரணையின் முடிவில் தர்மஸ்தலாவில் எலும்பு கூடு கிடைக்கவில்லை என்றால், மஞ்சுநாதா கோவில் கவுரவம் மேலும் கூடும். கோடிக்கணக்கான பக்தர்கள் வரும் வாய்ப்பு உள்ளது. மக்களுக்கு உள்ள சந்தேகம் நீங்கும். விசாரணை நடக்கும் போது, பல விஷயங்களை வெளியே சொல்ல முடியாது. இடைக்கால விசாரணை அறிக்கை என் கையில் இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் யாரையும் காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. உண்மை வெளிவர எதிர்க்கட்சியினரும் எங்களுக்கு உதவ வேண்டும். யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிந்து எஸ்.ஐ.டி.,யிடம் வழக்கை ஒப்படைக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாக விசாரிக்க வேண்டி இருந்ததால், எஸ்.ஐ.டி.,யிடம் கொடுத்தோம். அசோக்: உள்துறை அமைச்சர், சட்டசபையில் இன்று உண்மையை சொல்ல போகிறார் என்று, ஊடகங்களில் காலையில் இருந்து செய்தி வெளியானது. இதனால் மதிய சாப்பாடு கூட சாப்பிடாமல் இங்கு வந்தேன். ஆனால் பரமேஸ்வர் அளித்த விளக்கத்தில் உண்மை இல்லை. அமைச்சரவையில் இருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருவர் வழக்கில் சதி நடந்ததாக கூறுகிறார். உள்துறை அமைச்சர் எதுவும் நடக்கவில்லை என்பது போல பேசுகிறார். எஸ்.ஐ.டி., அமைக்க கோரி சித்தராமையா வீட்டிற்கு யார், யார் சென்றனர் என்ற பெயர் பட்டியல் என்னிடம் உள்ளது. நகர்ப்புற நக்சல்கள் ஊருக்குள் வந்துள்ளனர். காங்கிரஸ் மேலிடம் உத்தரவால் எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது. (அசோக்கின் இந்த கருத்துக்கு, காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பா.ஜ., உறுப்பினர்களும் சத்தமாக பேசியதால் அவையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. யார் என்ன பேசுகின்றனர் என்றே கேட்கவில்லை) பா.ஜ., - சுனில்குமார்: புதைக்கப்பட்ட உடலை தோண்ட வேண்டும் என்றால் நீதிமன்ற அனுமதி தேவை. தாசில்தார் மேற்பார்வையில் உடலை தோண்டி எடுக்க வேண்டும். புகார்தாரர் எங்கிருந்து மண்டை ஓடு, எலும்பு கூடு கொண்டு வந்தார். இதுபற்றி முதலில் விசாரித்து இருக்க வேண்டும். அசோக்: இன்று ஊடகங்களில் வெளியான தகவலின்படி புகார்தாரர், எஸ்.ஐ.டி., முன்பு, நான் சென்னையில் இருந்தேன். என்னை ஒரு கும்பல் அணுகி பணம் தருகிறோம், வீடு கட்டி தருகிறோம் என்று ஆசை காட்டியது. எனக்கு அழுத்தம் கொடுத்து, தர்மஸ்தலா மீது பொய் கூற வைத்தனர் என்று கூறி உள்ளார். ஆனால் பரமேஸ்வர் கூலாக பேசுகிறார். எஸ்.ஐ.டி., அமைக்கும்படி நீதிமன்றம் கூறியதா. புகார்தாரர் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று உண்மையை வெளிப்படுத்த வேண்டும். காங்., - பாலகிருஷ்ணா: எஸ்.ஐ.டி., விசாரணைக்கு அரசு உத்தரவிட்ட பின், வீரேந்திர ஹெக்டேயின் தம்பி முறை உறவு உள்ளவர், முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார். எஸ்.ஐ.டி., விசாரணைக்கு வழக்கை ஒப்படைத்ததற்கு நன்றி கூறினார். ஆனால் பா.ஜ., ஏன் இந்த விஷயத்தில் அரசியல் செய்கிறது. எங்களை வில்லன் என்று கூறி விட்டு, அவர்கள் ஹீரோ ஆக பார்க்கின்றனர். விசாரணை நடக்க விடாமல் சதி செய்கின்றனர். வழக்கை திசைதிருப்ப பார்க்கின்றனர். துணை முதல்வர் சிவகுமார்: உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அனுபவமிக்க அரசியல்வாதி. இந்த வழக்கில் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்கு தெரியும். நீதிமன்றத்தில் சென்று ஒருவர் வாக்குமூலம் அளித்த பின், அவர் கூறும் குற்றச்சாட்டு பற்றி விசாரிக்காமல் இருக்க முடியாது. தர்மஸ்தலா மீது பா.ஜ., உறுப்பினர்களுக்கு எவ்வளவு அக்கறை உள்ளதோ, அதை விட ஒரு படி மேல் எங் களுக்கும் உள்ளது. தர்மஸ்தலாவுக்கு அவப்பெயர் ஏற்பட கூடாது என்று, எங்கள் எம்.எல்.ஏ.,க்களுக்கும், அரசிடம் கூறினர். முதல்வர் சித்தராமையா மருத்துவ சிகிச்சைக்காக அடிக்கடி தர்மஸ்த லா செல்லும் நபர். அவருக்கும் இந்த வழக்கில் என்ன நடந்தது என்று தெரியும். வழக்கில் சதி நடந்தது உண்மை என்றால், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவர் உத்தரவிட்டு உள்ளார். கொஞ்சம் பொறுமை அவசியம். அசோக்: தர்மஸ்தலா வழக்கில் சதி நடந்ததாக சிவகுமார் கூறினார். சதி செய்தவர்களை பற்றி ஏன் கூற மறுக்கிறார். உண்மையை பேசுவேன் என்று கூறி, இங்கு வைத்து தானே சத்திய பிரமாணம் எடுத்தீர்கள். ஏன் உண்மையை பேச மறுக்கிறீர்கள். பரமேஸ்வர்: எஸ்.ஐ.டி., முன்பு புகார்தாரர் வாக்குமூலம் அளித்தது பற்றி ஊடகத்தில் வருவது உண்மை இல்லை. ஒருவேளை உண்மையாக இருந்தால், அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி