உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுதந்திர தின விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சுதந்திர தின விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

பெங்களூரு: ''பெங்களூரின் மானக் ஷா பரேடு மைதானத்தில் நடக்கவுள்ள சுதந்திர தின விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் தெரிவித்தார். சுதந்திர தினம் கொடியேற்று விழா நடக்கும், பெங்களூரின் மானக் ஷா பரேட் மைதானத்தில், ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடந்தது. அணிவகுப்பு மரியாதையை, நகர கமிஷனர் சீமந்த்குமார் ஏற்றுக்கொண்டார். பின் அவர் அளித்த பேட்டி: மானக் ஷா பரேட் மைதானத்தில் நடக்கும், சுதந்திர தின விழாவில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க, போக்குவரத்து நிர்வகிப்புக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் நடக்கும் அனைத்து சம்பவங்களை, உன்னிப்பாக கண்காணிக்க, கண்காணிப்பு கேமராக்கள்; நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்களின் பைகளை சோதிக்க ஸ்கேனர்கள் பொருத்தப்படும். மானக் ஷா மைதானத்தில், 15 நாட்களாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரின் அனைத்து ஹோட்டல்கள், லாட்ஜுகள், தங்கும் விடுதிகள் உட்பட, மற்ற இடங்களில் சந்தேகத்திற்கிடமாக தங்குவோர் கண்காணிக்கப்படுகின்றனர். விழாவுக்கு வருவோர், குறிப்பிட்ட நேரத்துக்குள் மைதானத்துக்குள் வர வேண்டும். அவர்களை சோதனையிட்ட பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் போலீசாருடன் ஒத்துழைக்க வேண்டும். மைதானத்துக்குள் சிகரெட், தீப்பெட்டி, கலர் திராவகங்கள், வீடியோ மற்றும் போட்டோ கேமராக்கள், குடிநீர் பாட்டில்கள், ஆயுதங்கள், கத்தி, கறுப்பு கைக்குட்டை, தின்பண்டங்கள், மதுபான பாட்டில், போதை பொருட்கள், பட்டாசு, வெடி பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. இதுபோன்ற பொருட்கள் இருந்தால், போலீசார் பறிமுதல் செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி