உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஆட்கொணர்வு மனுவை தவறாக பயன்படுத்திய மூதாட்டிக்கு ஐகோர்ட் ரூ.2 லட்சம் அபராதம்

ஆட்கொணர்வு மனுவை தவறாக பயன்படுத்திய மூதாட்டிக்கு ஐகோர்ட் ரூ.2 லட்சம் அபராதம்

பெங்களூரு: பக்கத்து வீட்டினர் மீது கொடுத்த புகார் குறித்து, நடவடிக்கை எடுக்காத போலீசாரை பழிவாங்க, மகன் காணாமல் போனதாக நாடகமாடிய மூதாட்டிக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம் இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. பெங்களூரின் இந்திரா நகரில் வசிப்பவர் மஹேஸ்வரி, 72. நடப்பாண்டு ஜூலை 7ம் தேதி முதல் தன் மகன் கிருபளானி, மர்மமான முறையில் காணாமல் போனதாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்தார். மகனை கண்டுபிடித்து ஒப்படைக்கும்படி, போலீசாருக்கு உத்தரவிட கோரினார். நீதிமன்றமும் மூதாட்டியின் மகனை கண்டுபிடிக்கும்படி, இந்திரா நகர் போலீசாருக்கு உத்தரவிட்டது. போலீசாரும் விசாரணை நடத்தினர். மொபைல் போன் இருப்பிடத்தைக் கொண்டு தேடினர். ஆகஸ்ட் 5ம் தேதி, சென்னையில் ஹோட்டலில் இருந்த கிருபளானியை கண்டுபிடித்தனர்; உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை பெங்களூரு அழைத்து வரும் வழியில், போலீசாரை திட்டி, தாக்கியதையும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவரை யாரும் கடத்தவில்லை. சென்னையில் தலைமறைவாக இருந்து, காணாமல் போனதாக நாடகமாடியதாக அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையில், 'தன் பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர், தன் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்க்கிறார். நள்ளிரவில் பார்ட்டி நடத்தி, அக்கம், பக்கத்தினருக்கு தொந்தரவு கொடுத்தார். இதுகுறித்து, பல முறை போலீசாரிடம், மஹேஸ்வரி புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தவில்லை. போலீசாரின் அலட்சியத்தால் வெறுப்படைந்த மஹேஸ்வரி, அவர்களை பழிவாங்க முடிவு செய்து, தன் மகன் கிருபளானியை, தமிழகம், சென்னையில் தலைமறைவாக இருக்க வைத்தார். அதன்பின், நீதிமன்றத்தில் பொய்யாக ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். கிருபளானியுடன் மனுதாரரும் அவரு மகள், நண்பர்கள் தொடர்பில் இருந்துள்ளனர். சட்டத்தை மனுதாரர் தவறாக பயன்படுத்தியுள்ளார்' என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய நீதிபதி சிவராமன், 'போலீசாரை பழி தீர்க்க கதை கட்டியது உறுதியாகியுள்ளது. சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இவருக்கு அபராதம் விதிப்பது கட்டாயம்' என கூறி, நேற்று முன் தினம் கருத்து தெரிவித்தார். 'மஹேஸ்வரிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. உத்தரவு வெளியான இரண்டு வாரத்தில், அபராத தொகையை, கர்நாடக சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் கர்நாடக போலீஸ் நல நிதிக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்தாவிட்டால், மனுதாரர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்யும்படி, நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி