கே.ஆர்.எஸ்., பிருந்தாவன் கேளிக்கை பூங்கா மத்திய, மாநில அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பெங்களூரு: மாண்டியா கே.ஆர்.எஸ்., பிருந்தாவனில் 2,000 கோடி ரூபாய்க்கு கேளிக்கை பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.மாண்டியா மாவட்டம், கே.ஆர்.எஸ்., அணை அருகில் உள்ள பிருந்தாவன் தோட்டத்தில், 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கேளிக்கை பூங்கா அமைக்க, மாநில அரசு டெண்டர் அழைப்பு விடுத்திருந்தது. பொதுநல மனு
இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாண்டியா மாவட்டத்தை சேர்ந்த போரய்யா உட்பட பல விவசாய அமைப்புகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தன.இம்மனு, நீதிபதி ஷியாம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தது.மனுதாரர்கள் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:ஸ்ரீரங்கபட்டணா, பாண்டவபுரா கே.ஆர்., பேட்டே மலவள்ளி, சென்னபட்டணா, ராம்நகரில் உள்ள லட்சக்கணக்கான விவசாய நிலத்துக்கு நீர்ப்பாசனம் ஏற்படுத்த, மாண்டியா மாவட்டத்தில் கே.ஆர்.எஸ்., அணையை அப்போதைய மைசூரு மன்னராக இருந்த நால்வடி கிருஷ்ணராஜ உடையார் கட்டினார்.மன்னர் ஆட்சியின் போது திவானாக இருந்த மிர்சா இஸ்மாயில், அணை அருகில் 198 ஏக்கரில் நீர்ப்பாசனம், தோட்டக் கலைக்காக பிருந்தாவன் தோட்டம் கட்டினார். ஆனால் மாநில அரசோ, பிருந்தாவனை சுற்றுலா தலமாக மாற்றி உள்ளது. தற்போது பிருந்தாவன் பூங்கா மேலாண்மை என்ற பெயரில், மாநில அரசு 2,663 கோடி ரூபாய்க்கு கேளிக்கை பூங்கா கட்ட, டெண்டருக்கு அழைப்பு விடுத்து உள்ளது. அணைக்கு பாதிப்பு?
இத்திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டால், கே.ஆர்.எஸ்., அணைக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், இந்நீரை நம்பி உள்ள லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.மேலும், கே.ஆர்.எஸ்., நீர்ப்பாசன கால்வாயை துார்வார வேண்டும் என்று 20 ஆண்டுகளாக பல்வேறு விவசாய சங்கங்கள் போராடி வருகின்றன. ஆனால் அரசோ, நிதி ஒதுக்கவில்லை.அதே வேளையில், தனியார் நிறுவனத்துக்கு பயன் அளிக்கும் வகையில், சில அரசியல்வாதிகளின் தனிப்பட்ட நலன்களுக்காக, கேளிக்கை பூங்கா திட்டத்தை உருவாக்கி உள்ளது. எனவே, இத்திட்டத்துக்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஷியாம் பிரசாத், ''பி.பி.பி., எனும் பொது மற்றும் தனியார் பங்களிப்பில் உருவாக்கும் இத்திட்டம் தொடர்பாக அறிக்கையை அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்க வேண்டும்.''இது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம், தேசிய அணை பாதுகாப்ப ஆணைய தலைவர், மாநில தலைமை செயலர் உட்பட 17 எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இவ்வழக்கு விசாரணை ஜூன் 9க்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.