வீலிங் செய்வோரின் அகங்காரத்தை அடக்கணும் கர்நாடக அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பெங்களூரு : 'வீலிங் உள்ளிட்ட துர் சாகசங்களை செய்து சமுதாயத்தை அச்சுறுத்தி, அதன் மூலம் சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரின் அகங்காரத்தை அடக்க வேண்டும்' என, கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.கர்நாடக மாநிலம், கொப்பால் மாவட்டம், கங்காவதி தாலுகாவின், ஹேமகுட்டா துர்கம்மா கோவில் அருகில் கடந்த அக்டோபர் 9ம் தேதியன்று, மாலை 4:30 மணியளவில் மூன்று இளைஞர்கள், 'யமஹா ஆர்எக்ஸ்' பைக்கில் வீலிங் செய்தபடி சென்றனர். அதே நேரத்தில் அவ்வழியாக ரோந்தில் ஈடுபட்டிருந்த போலீசார், அபாய வீலிங் செய்வதை பார்த்து, அவர்களை பிடிக்க முயற்சித்தனர். வாக்குவாதம்
இளைஞர்கள் வேகமாக சென்றதில், நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர்; போலீசார் உதவிக்கு சென்றனர். ஆனால் இளைஞர்கள் திட்டினர். போலீசாரை தாக்கி, போனை பறித்து கால்வாயில் வீசினர். அவர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.எனவே இளைஞர்கள் மீது, பல்வேறு சட்டப்பிரிவுகளில், கங்காவதி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தார்வாட் கிளையில் இளைஞர்களில் ஒருவரான அர்பாஜ்கான் மனு தாக்கல் செய்தார். இம்மனு மீது நீதிபதி ஸ்ரீஷானந்தா முன்னிலையில் நேற்று விசாரணை நடந்தது. இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி ஸ்ரீஷானந்தா அளித்த தீர்ப்பு: கடும் விதிகள்
அலட்சியமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்த, தற்போதைய சட்டங்கள் போதாது. மோட்டார் வாகன சட்டம் உட்பட சம்பந்தப்பட்ட சட்டங்களில், கடும் விதிகளை சேர்த்து, சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கும்போது, அபாயமான வீலிங் உள்ளிட்ட துர் சாகசங்களை கவனிக்க வேண்டும். சமுதாயத்தை அச்சுறுத்தி, அதன் மூலம் சட்டம் - ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்துவோரின் அகங்காரத்தை அடக்க வேண்டும்.இந்த வழக்கில் மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகள், ஜாமின் அளிக்க கூடியவை. ஆனால் அவர் தவறு செய்துள்ளார். அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது என்பதற்காக, அவரது வேண்டுகோளை ஏற்க முடியாது.இதற்கு முன்பு அபாயகரமாக வீலிங் செய்வது, நகர்ப்புற நெடுஞ்சாலைகளில் மட்டுமே இருந்தது. இப்போது கிராமங்களிலும் விரிவடைந்துள்ளது. இளம் சமுதாயத்தினர் இரு சக்கர வாகனங்களில் வீலிங் செய்வதை, வீரச்செயல் என நம்புகின்றனர். இத்தகைய செயலால் ஏற்படும் அபாயங்கள் குறித்து தெரிவதில்லை.வீலிங் செய்பவர், அவர் பின்னால் அமர்ந்திருப்பவர் மட்டுமின்றி, பொது மக்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. இளைஞர்களின் செயல், சமுதாயத்தின் நிம்மதி, அமைதியை குலைக்கிறது.இவ்வாறு கருத்து தெரிவித்து, ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.