கே.ஆர்.எஸ்., அணையை சுற்றி கல்குவாரிகள் அறிக்கை அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
பெங்களூரு: 'கே.ஆர்.எஸ்., அணையின் சுற்றுப்பகுதிகளில், கல்குவாரி குறித்து அறிக்கை அளிக்க, ஐ.ஐ.எஸ்.சி.,க்கு இன்னும் எத்தனை நாட்கள் வேண்டும்?' என, மாநில அரசிடம் கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.'மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள, கே.ஆர்.எஸ்., அணை பகுதியில், சட்டவிரோதமாக கல்குவாரிகள் செயல்படுகின்றன. இதனால் அணைக்கு ஆபத்து ஏற்படுகிறது' என, முன்னாள் எம்.பி., சுமலதா, பாண்டவபுராவின் குமார் உட்பட, சிலர், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம், '20 கி.மீ., சுற்றுப்பகுதிகளில், எந்த விதமான கல்குவாரிகளும் நடத்தக் கூடாது' என, 2024 ஜனவரி 9ம் தேதி தடை விதித்தது.'இது வெறும் அணை மட்டுமல்ல. மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடையாளம். நாட்டின் தலை சிறந்த இன்ஜினியர் விஸ்வேஸ்வரய்யா கட்டியுள்ளார். 'மாநில மக்கள் வியர்வை, ரத்தம் சிந்தி அணையை கட்டினர். மைசூரு மஹாராஜா நால்வடி கிருஷ்ண ராஜ உடையாரின் தொலைநோக்கு பார்வையால் உருவானது. இத்தகைய அணையை பாதுகாக்க, சுரங்கத்தொழிலை தடை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது' என, உத்தரவில் நீதிமன்றம் கூறியிருந்தது.அணையின் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் கல்குவாரிகளில் வெடி பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து, இந்திய அறிவியல் ஆய்வகம் ஆய்வு நடத்தி, அறிக்கை அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அறிக்கை அளிக்கப்படவில்லை.இந்த வழக்கு உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி காமேஸ்வர ராவ், நீதிபதி ஜோஷி முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பு வக்கீல், 'கல் குவாரி தொழிலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, ஆய்வு நடத்தி இந்திய அறிவியல் ஆய்வகம் அறிக்கை அளித்தது.'ஆனால் அறிவியல் ரீதியில் ஆய்வு நடக்கவில்லை' என்று புகார் கூறினார்.அரசு தரப்பு வக்கீல், ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். அப்போது நீதிபதிகள், எவ்வளவு அவகாசம் தேவைப்படும் என்பதை பற்றி, இந்திய அறிவியல் ஆய்வகத்தில் தகவல் பெற்று, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தனர்.