சாலையில் தாக்கி கொண்ட சம்பவம் 2 புகாரையும் ரத்து செய்த ஐகோர்ட்
பெங்களூரு: நடப்பாண்டு ஏப்ரல் மாதம், விமானப்படை விங் கமாண்டர் ஷீலாதித்யா போஸ், கொல்கட்டாவுக்கு செல்ல மனைவியுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் நிறுவன ஊழியர் விகாஸ் குமார், இவர்களின் காரை முந்தும் போது, பிரச்னை ஏற்பட்டது. இந்த பிரச்னை வாய்த்தகராறாக மாறி, கைகலப்பானது. இது தொடர்பாக, ஷீலாதித்யா மனைவி போலீசில் புகார் அளித்திருந்தார். பதிலுக்கு விகாஸ் குமாரும் புகார் அளித்திருந்தார். இவ்வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு விசாரணை நீதிபதி சச்சின் சங்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒருவர் மீது ஒருவர் பதிவு செய்த எப்.ஐ.ஆர்.,ஐ ரத்து செய்யும்படி, இருவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது நீதிபதி கூறியதாவது: இவ்வழக்கல் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் விமானப்படை அதிகாரி. அற்ப காரணத்துக்காக ஏற்பட்ட சண்டையால், பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகி உள்ளது. புகார்தாரரும், எதிர் புகார்தாரரும் வழக்கை தீர்த்து கொள்ள ஒப்புக் கொண்டனர். அத்துடன் இவ்வழக்கை தொடர்ந்து நடத்துவதால், எந்த பிரயோஜனமும் இல்லை. மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, இவ்வழக்கு ரத்து செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.