காஸ், பெட்ரோல் பிரச்னை விரைவில் தீரும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நம்பிக்கை
துமகூரு: ''ஈரான் வழியாக ஏற்கனவே இரண்டு, மூன்று கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இந்தியர்களுக்கு சலுகைகளை வழங்கி உள்ளனர். எனவே, எரிவாயு மற்றும் பெட்ரோல் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். யாருக்கும் பிரச்னை வராது,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார். துமகூரில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் நேற்று வருகை தந்தார். அப்போது, அவர் அளித்த பேட்டி: எத்தினஹொளே ஆரம்ப திட்டத்தின்படி, வடேரஹள்ளியிலேயே அணை கட்டப்படும். துமகூரு - சிக்கபல்லாபூர் மாவட்டங்களுக்கு இடையேயான எல்லை பகுதியே வடேரஹள்ளி. அங்கு, 2,5--00 ஏக்கர் மற்றும் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில், 2,500 ஏக்கர் என, 5,000 ஏக்கரில் தடுப்பணை கட்டப்படும். முந்தைய பா.ஜ., அரசு, அசல் திட்டத்தை மாற்றி, பைரகொண்டனஹள்ளியிலே தடுப்பணை கட்ட திட்டமிட்டிருந்தது. எங்கள் அரசு, அசல் திட்டத்தின்படி வடேரஹள்ளியில் அணை கட்டப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்து உள்ளது. உள்ளூர்வாசிகளின் எதிர்ப்பையும் மீறி, அவர்களுடன் அமர்ந்து பேசி பிரச்னையை தீர்ப்போம். தடுப்பணையில், ஒன்றரை டி.எம்.சி., தண்ணீர் அங்கே சேமிக்கப்படும். உள்இடஒதுக்கீடு தொடர்பாக, முதல்வர் சித்தராமையா வரும், 27ம் தேதி சிறப்பு கூட்டத்தை கூட்டி உள்ளார். அன்றே அந்தப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, நம்புகிறோம். அன்று எடுக்கப்படும் முடிவுக்கு பின், அரசு உத்தரவு பிறப்பிக்கும். அரசு உத்தரவு பிறப்பித்த பின், எங்கள் செயல்முறை துவங்கும். அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து உள்ளோம். போலீஸ் துறையில் மட்டும், 8,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. துமகூரு மாவட்டத்தில், தற்போது எரிவாயு பிரச்னை இல்லை. இங்கும், அங்கும் வணிக சிலிண்டர்களில் சிக்கல் இருப்பதாக கூறுகின்றனர். ஆனால், வீட்டு எரிவாயுவில் எந்த பிரச்னையும் இல்லை. ஹோட்டல் உரிமையாளர்கள் ஓரிரு நாட்களுக்கு சிக்கலை சந்திக்க நேரிடும். வர்த்தக சிலிண்டரை கள்ள சந்தையில் விற்க முயன்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஈரான் வழியாக ஏற்கனவே இரண்டு - மூன்று கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அவர்கள் இந்தியர்களுக்கு சலுகைகளை வழங்கி உள்ளனர். எனவே, எரிவாயு மற்றும் பெட்ரோல் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும். யாருக்கும் பிரச்னை வராது. இவ்வாறு அவர் கூறினார்.