தீபாவளி பட்டாசுகளால் விபத்து சிகிச்சைக்கு மருத்துவமனை தயார்
பெங்களூரு: தீபாவளி நெருங்குவதால், பட்டாசுகளால் காயம் அடையும் சிறுவர்கள், பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மின்டோ அரசு மருத்துவமனையில் தனி வார்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பெங்களூரில் மின்டோ அரசு மருத்துவமனை இயக்குநர் டாக்டர் சுரேஷ்பாபு நேற்று கூறியதாவது: தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது, காயம் அடையும் குழந்தைகள், பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை ஊழியர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளனர். காயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு தயார் நிலையில் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பட்டாசுகளால், நுாற்றுக்கணக்கான குழந்தைகள் கண்கள், உடல் பாகங்களில் காயமடைகின்றனர். அத்தகையவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். 24 மணி நேரம் சிகிச்சை அளிக்கப்படும். இதற்கு தேவையான மருந்துகள், பணியாளர்கள் தயார். பட்டாசு வெடிக்கும் போதும் ஏற்படும் விபத்தால், 2024ல் 71 பேர், 2025ல், 56 பேரும் காயம் அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார். இது போல, பெங்களூரு மற்றும் மாநிலத்தின் பல மருத்துவமனைகளிலும், தனி வார்டுகள் துவக்கப்பட்டுள்ளன.