பட்டாசு விபத்துகள் மருத்துவமனை தயார்
பெங்களூரு: தீபாவளி பண்டிகை நேரத்தில், பட்டாசுகளால் காயமடைவோருக்கு சிகிச்சையளிக்க, மிண்டோ மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனை அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டுதோறும் தீபாவளி நேரத்தில், பட்டாசு வெடித்து கண்கள், உடல்களில் காயமடையும் சம்பவங்கள் நடக்கின்றன. பலரும் சிகிச்சைக்காக மிண்டோ மருத்துவமனைக்கு வருகின்றனர். பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பட்டாசு வெடித்து காயமடைந்து, மருத்துவமனைக்கு வருவோருக்கு சிகிச்சையளிக்க, நாங்கள் தயாராகிறோம். ஆண்களுக்கு 10 படுக்கைகள், பெண்களுக்கு 10, சிறார்களுக்கு 15 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கண்களில் காயமடைந்தோருக்கும், உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டோருக்கு சிகிச்சையளிக்க, தனித்தனி வசதி செய்யப்பட்டுள்ளது. தீபாவளி நேரத்தில், மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும். சிகிச்சைக்கான ஐ டிராப் உட்பட அனைத்து மருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பட்டாசு வெடிக்கும்போது, கவனமுடனும் பாதுகாப்புடன் வெடிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.