மனைவியை இரண்டு துண்டாக வெட்டி கொன்ற கணவர்
விஜயபுரா : மனைவியை கொலை செய்த கணவர், உடலை இரண்டாக வெட்டி கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். விஜயபுரா மாவட்டம், சிந்தகி தாலுகாவின், கனிஹாரா கிராமத்தில் வசிப்பவர் பரமானந்தா, 50. இவரது மனைவி நீலம்மா, 46. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். தம்பதிக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லை. தினமும் ஏதாவது ஒரு விஷயத்தை வைத்து கொண்டு, சண்டை போடுவது வழக்கம். அதேபோன்று, குடும்ப பிரச்னை காரணமாக, ஆகஸ்ட் 25ம் தேதி இரவு, தம்பதிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் குடும்பத்தினர் உணவருந்தி, உறங்க துவங்கினர். இவர்களின் நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளனர். பன்றிகள் பயிரை நாசமாக்குவதால், பட்டாசு வெடித்து அவற்றை விரட்டுவதற்காக, நீலம்மா நிலத்துக்கு சென்றார். அப்போது மனைவியை பின் தொடர்ந்து சென்ற பரமானந்தா, அரிவாளால் வெட்டி கொலை செய்தார். உடலை இரண்டாக வெட்டி அங்கிருந்த கிணற்றில் வீசிவிட்டு தப்பியோடினார். மறுநாள் காலை பிள்ளைகள், தாயை காணாமல் தேடினர். எங்கும் தென்படாததால், பீதியடைந்த பிள்ளைகள், சிந்தகி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசாரும் கிராமத்துக்கு வந்து, நீலம்மாவை தேடினர். அப்போது வீட்டின் சிறிது துாரத்தில் உள்ள கிணற்றடியில், ரத்தக்கறை இருந்தது. சந்தேமடைந்த போலீசார், கிணற்றில் தேடிய போது, உடலின் அரை பகுதி சிக்கியது. அதை மீட்ட போலீசார், இடுப்புக்கு கீழ் மீதி உடலை தேடி வருகின்றனர். வழக்கு பதிவு செய்து, கொலையாளி பரமானந்தாவை தேடுகின்றனர்.