கள்ளத்தொடர்பை தட்டிக்கேட்ட மனைவியை கொன்ற கணவர்
ககலிபுரா: கள்ளத்தொடர்பை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட ஆத்திரத்தில், தலையில் கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவரை போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரு தெற்கு மாவட்டம் ககலிபுரா அருகேயுள்ள குல்லெகவுடனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகய்யா, 25. இவரது மனைவி சிஞ்சனா, 23. இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ரேணுகய்யாவுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அந்த பெண்ணின் வீட்டிற்கு ரேணுகய்யா அடிக்கடி சென்று வந்து உள்ளார். இதுபற்றி அறிந்த மனைவி, கணவரை தட்டிக்கேட்டார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அத்துடன், சிஞ்சனாவுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக கணவர் சந்தேகித்தார். நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், சிஞ்சனாவின் தலையில் ரேணுகய்யா கல்லால் தாக்கினார். பின், நிலை குலைந்து விழுந்த சிஞ்சனா தலையில் கல்லை போட்டு ரேணுகய்யா கொலையும் செய்தார். தலைமறைவாக உள்ள அவரை ககலிபுரா போலீசார் தேடி வருகின்றனர்.