ஷிவமொக்கா: கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல், கால்வாயில் குதித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவின், டி.பி.ஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் குருராஜ், 30. இவர், கே.பி.சி.எல்.,லில் பத்ரா அணையின் பொறியாளராக பணியாற்றுகிறார். இவருக்கும், ஷிகாரிபுராவின், தின்டினஹள்ளி கிராமத்தை சேர்ந்த லதா, 23, என்பவருக்கும் கடந்த ஏப்ரல் 14ல், திருமணம் நடந்தது. திருமணத்தின்போது, லதாவின் பெற்றோர், தங்க நகைகளுடன் 10 லட்சம் ரூபாயும் வரதட்சணையாக கொடுத்தனர். அரசு அதிகாரி என்பதால், 60 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு, திருமணத்தை ஆடம்பரமாக நடத்தினர். ஆனால் திருமணமான ஒரே மாதத்தில், கணவர் வீட்டினர் மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த துவங்கினர். ஒரு நாளும் நிம்மதியாக இருக்க விடவில்லை. அது மட்டுமின்றி, மனைவியின் கண் முன்னே, குருராஜ், தன் அக்கா மகளுடன் நெருக்கமாக இருந்தார். வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்துள்ளார். ஆடி மாதத்தை முன்னிட்டு, தன் தாய் வீட்டுக்கு லதா வந்திருந்தார். ஆடி முடிந்தும் குருராஜ், மனைவியை அழைத்துச் செல்லவில்லை. மனம் நொந்த லதா, நவ. 23ம் தேதி, கடிதம் எழுதி வைத்துவிட்டு, பத்ராவதியின், சித்தாபுரா அருகில் உள்ள பத்ரா கால்வாயில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு மு ன்பு கால்வாய் அருகில் கோவில் முன், வளையல், மொபைல் போனை வைத்துச் சென்றுள்ளார். தகவலறிந்து அங்கு வந்த பாளஹொன்னுார் போலீசார், கால்வாயில் லதாவின் உடலை தேடுகின்றனர். இதுவரை உடல் கிடைக்கவில்லை. அவரது பெற்றோர், கால்வாய் அருகிலேயே காத்திருக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனர்.