உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  எனக்கு திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர் நீதிபதி முன்னிலையில் எம்.எல்.ஏ., கதறல்

 எனக்கு திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர் நீதிபதி முன்னிலையில் எம்.எல்.ஏ., கதறல்

பெங்களூரு: யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தண்டனையை எதிர்பார்க்கும் வினய் குல்கர்னி, தனக்கு திருமண வயதில் மகள்கள் இருப்பதாக, நீதிபதியிடம் கண்ணீருடன் கூறினார். தார்வாடின் மாவட்ட பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலரான பா.ஜ.,வை சேர்ந்த யோகேஷ் கவுடா கொலை வழக்கில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி குற்றவாளி என, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நேற்று தண்டனையை அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. இன்றைக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இறுதிக்கட்ட வாதத்தில் ஈடுபட்ட சி.பி.ஐ., தரப்பு வக்கீல்கள், 'இது கொடூரமான கொலை. குற்றவாளிகளுக்கு அதிகபட்சம் மரண தண்டனை விதிக்க வேண்டும்' என்று, வாதிட்டனர். இதைக்கேட்டு வெலவெலத்த குற்றவாளிகள், நீதிபதி முன்னிலையில் கைகூப்பி கண்ணீர் விட்டு, தண்டனை அளவை குறைக்கும்படி மன்றாடினர். வினய் குல்கர்னி. தன் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நீதிபதியிடம் விவரித்தார். 'நான், 27 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஒரு விவசாயியாக 3,500 பசுக்களை வளர்க்கிறேன். என் தொகுதியில் நான் யாருக்கும் வலியை ஏற்படுத்தியது இல்லை. எனக்கு திருமண வயதில், இரண்டு மகள்கள் உள்ளனர். அரசியல் பகைமைக்காக, என் மீது வழக்கு போட்டுள்ளனர்' என்று கதறி அழுதார். அதேபோன்று மற்ற குற்றவா ளிகளும், தங்களின் குடும்பம், உடல் நிலை பாதிப்பை காரணம் காட்டி, குறைவான தண்டனை வழங்கும்படி வேண்டினர். யோகேஷ் கவுடாவை ஜிம்மில் புகுந்து, கொடூரமாக கொலை செய்தவர்களுக்கு, நீதிமன்றம் என்ன தண்டனை விதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள, மாநில மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதற்கிடையே மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் உட்பட, பல நீதிபதிகளை இடம் மாற்றி, கர்நாடக உயர் நீதிமன்ற ரிஜிஸ்ட்ரார் ஜெனரல் நேற்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு ஜூன், 1 முதல் அமலுக்கு வரவுள்ளது. நீதிபதி சந்தோஷ் கஜானன் பட், பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்தவர். வீட்டு பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு, வாழ்நாள் முழுக்க சிறையில் இருக்கும்படி தீர்ப்பளித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர். முடா வழக்கில் முதல்வர் சித்தராமையாவுக்குவிடம் விசாரணை நடத்தி, லோக் ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த பி ரிபோர்ட்டை அங்கீகரித்தார். பிக்லு சிவா கொலை வழக்கு உட்பட, பல முக்கிய வழக்குகளை விசாரித்தார். தற்போது யோகேஷ் கவுடா கொலை வழக்கில், வினய் குல்கர்னி உட்பட மற்றவர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்ததும், இதே நீதிபதி தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை