பெற்றோரை கைவிட்டால் பிள்ளைகளுக்கு சொத்து கிடையாது
பெங்களூரு: ''உடல் நலம் பாதித்த பெற்றோரை, மருத்துவமனையில் தவிக்க விட்டு, ஓட்டம் பிடிக்கும் பிள்ளைகளுக்கு, பெற்றோர் எழுதி கொடுத்த சொத்துகள் ரத்து செய்யப்படும்,'' மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் எச்சரிக்கை விடுத்தார்.இன்றைய இயந்திர வாழ்க்கையில், பாசம், மனிதாபிமானம் எல்லாம் காணாமல் போய் விட்டது. தங்களை பெற்றெடுத்து வளர்த்த பெற்றோரை, ஆதரவற்றோர் இல்லங்களில் விட்டு செல்கின்றனர்.சொத்து உயில் தங்கள் பெயரில் மாற்றப்பட்ட பின்னர், உடல் நலம் பாதிக்கப்படும் பெற்றோரை, அரசு மருத்துவமனையில் சேர்க்கின்றனர். பின், அவர்களை, கவனிக்காமல் அங்கேயே தவிக்க விட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.இதுபோன்று, பெலகாவியில் 150 முதியோர், அரசு மருத்துவமனையில் உள்ளனர். இதை மருத்துவ கல்வி துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், தீவிரமாக எடுத்து கொண்டுள்ளார். பத்திரம் ரத்து
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:அரசு மருத்துவமனையில் பெற்றோரை சேர்த்த பின், அவர்களை அங்கேயே விட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இத்தகைய பிள்ளைகளின் பெயரில், பெற்றோர் எழுதி கொடுத்த சொத்து உயில் பத்திரங்கள் ரத்து செய்யப்படும். இந்த சொத்துகள், மீண்டும் பெற்றோர் பெயருக்கு மாற்றப்படும். இப்படி மாற்றுவதற்கு பெற்றோருக்கு உரிமை உள்ளது. மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, மருத்துவ மைய இயக்குநர்கள், வருவாய் துணை பிரிவு உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டு உள்ளேன். இச்சட்டம் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. மூத்த குடிமக்களுக்கு பிள்ளைகளோ அல்லது உறவினர்களோ பொருளாதார ரீதியிலும், மருத்துவ ரீதியிலும் உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மருத்துவ கல்வி இயக்குநர் சுஜாதா ராத்தோட், வெளியிட்டுள்ள அறிக்கை:மாநிலத்தின் அனைத்து மருத்துவ மையங்கள், வருவாய் துணை பிரிவு உதவி இயக்குநரிடம் புகார் செய்யுங்கள். பெற்றோரை கவனிக்கவில்லை என்றால், அவர்கள் பெயரில் பெற்றோர் எழுதி கொடுத்த சொத்துகளை ரத்து செய்து, மீண்டும் பெற்றோர் பெயரில் மாற்ற வேண்டும். உத்தரவு
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் சிலர், மருத்துவமனையில் இலவச உணவு, உடை, தங்கும் வசதி கிடைக்கும் என்பதால் பெற்றோரை விட்டு செல்கின்றனர். இவ்வாறு பிம்ஸ் மருத்துவமனையில் விட்டு செல்லப்பட்ட முதியவர்கள் பலர், பல மையங்களில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.