உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  குடும்பத்தினருடன் முதியவரை சேர்த்த இன்ஸ்டாகிராம்

 குடும்பத்தினருடன் முதியவரை சேர்த்த இன்ஸ்டாகிராம்

சாம்ராஜ்நகர்: எதிர்பாராமல் குடும்பத்தை விட்டு பிரிந்து, ஆதரவற்ற நிலையில் இருந்த முதியவர், தன் குடும்பத்துடன் சேர, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் உதவியது. மத்திய பிரதேச மாநிலம், தின்டோரி மாவட்டம், அமர்புர் தாலுகாவின், தன்வாசி கிராமத்தை சேர்ந்தவர் பிரீத்தம் சிங், 60. இவர் கடந்தாண்டு கூலி வேலைக்காக, தன் குடும்பத்துடன், சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், எலந்துாருக்கு வந்திருந்தார். எதிர்பாராமல் குடும்பத்தில் இருந்து பிரிந்தார். வழி தெரியாமல், மொழி தெரியாமல் பரிதவித்தார். முதியவருக்கு ஹிந்தியை தவிர, வேறு எந்த மொழியும் தெரியவில்லை. வீட்டினரின் மொபைல் போன் எண்ணும் தெரியவில்லை. எலந்துார் பஸ் நிலையத்தின் சுற்றுப்பகுதிகளில் நடமாடினார். இரவு நேரத்தில் சாலை ஓரத்தில் படுத்து, நாட்களை கடத்தினார். இவரை கவனித்த எலந்துார் போலீசார், நவம்பர் 11ல் சந்தேமரஹள்ளியில் உள்ள, 'ஞான சிந்து' முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். அன்று முதல் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர், ஹிந்தியில் தன் ஊர் மற்றும் குடும்பத்தினரை பற்றி கூறினார். இவரை எப்படியாவது குடும்பத்துடன் சேர்க்க வேண்டும் என, முதியோர் இல்ல நிர்வாகி மகாதேவசாமி விரும்பினார். அதே வேளையில் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை செய்ய வந்த, சத்யா எஜுகேர் காம்பிடென்சி டிரஸ்ட் மகேஷ், முதியவரிடம் பேசி ஊரை தெரிந்து கொண்டார். முதியவரை வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் உள்ள மத்திய பிரதேசத்தின், தின்டோடி மாவட்டத்தின் குரூப்பில் வெளியிட்டு, உதவி கோரினார். இதை கவனித்த முதியவரின் மகன் ராஜேஷ்சிங், கடந்த டிசம்பர் 30ம் தேதி, தந்தையை அழைத்து செல்ல எலந்துாருக்கு வந்தார். போலீசார் மூலமாக அவரிடம் முதியவரை ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ