ஆளும் காங்கிரசில் உட்கட்சி குழப்பம் கே.எம்.எப்., தலைவர் தேர்தல் இழுபறி
கே.எம்.எப்., தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படாமல் ஓராண்டாக தள்ளி போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு ஆளும் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பமே காரணம் என தெரிய வந்துள்ளது. கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் கூட்டமைப்பு தலைவர் பதவி என்பது ஒரு கேபினட் அமைச்சர் பதவிக்குரிய அதிகாரம் இருப்பதாக கருதப்படுகிறது. இதில், 25 லட்சம் பால் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில், விவசாயிகள் முக்கிய பங்கு வகிப்பர். எனவே, கே.எம்.எப்., தலைவர் பதவிக்கு காங்கிரசில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பதவி மீது ஆசை தேர்தல் தள்ளிப்போக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோரின் மோதலே காரணம் என, பல சங்கங்களின் கருத்தாக உள்ளது. முன்னாள் எம்.பி.,யும், துணை முதல்வர் சிவகுமாரின் தம்பியுமான சுரேஷ் இப்பதவி மீது கண் வைத்துள்ளார். ஆனால், முதல்வர் சித்தராமையா ஆதரவுடன் கே.எம்.எப்., முன்னாள் தலைவர் பீமா நாயக், மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. நஞ்சே கவுடா, கொப்பால் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராகவேந்திரா ஹிட்னால் ஆகியோர் பதவி மீது ஆசை வைத்துள்ளனர். மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடந்து, ஓராண்டு ஆகியும், மாநில கே.எம்.எப்., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தாமல் அரசியல் உள்நோக்கத்துடன் இழுத்தடிக்கின்றனர். 'கோமுல்' என்ற கோலார் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து வந்த, சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தை தனியாக பிரித்து 'சிமுல்' என்ற பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட்டதால், இதுவரை மாவட்ட அளவிலான இயக்குநர்கள், தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. ஆர்வமில்லாத பா.ஜ., மற்ற 15 மாவட்ட நிர்வாகத்திற்கும் தேர்தல் நிறைவு பெற்று ஓராண்டு முடிகிறது. இவர்களுடன் அரசின் ஆறு நியமன உறுப்பினர்கள் ஓட்டளித்து தான் கே.எம்.எப்., தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்பதவிகள் பெரும்பாலும் காங்கிரஸ் வசமே உள்ளதால், எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., தரப்பில், தலைவர் பதவிக்கு விருப்பப்படவில்லை. தற்போதைய நிலையில், நவம்பரில் கே.எம்.எப்., தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கே.எம்.எப்., தலைவர் பதவி, காங்கிரசில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -