உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மைசூரில் சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்கம்: வீரர்கள் உற்சாகம்

 மைசூரில் சர்வதேச தரத்தில் விளையாட்டு அரங்கம்: வீரர்கள் உற்சாகம்

மைசூரில் சர்வதேச தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் கட்ட அரசு ஒப்புதல் அளித்துள்ளதால், விளையாட்டு வீரர்கள் குஷி அடைந்துள்ளனர். விரைவில் 100 கோடி ரூபாய் செலவில், விளையாட்டு அரங்கம் கட்டும் பணி துவங்கவுள்ளது. பெங்களூருக்கு பின், வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மைசூரும் ஒன்றாகும். இங்கும் கிரிக்கெட், கால்பந்து, பேட்மின்டன், கபடி, மல்யுத்தம், ஒட்டம் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் திறன் பெற்றவர்கள் பலர் உள்ளனர். ஆனால் தங்களுக்குள் உள்ள திறமையை, வெளியே கொண்டு வந்து தேசிய, சர்வதேச அளவில் சாதனை செய்ய பயிற்சி பெற சரியான விளையாட்டு அரங்கம் இல்லை. இதனால் விளையாட்டு துறையில், மைசூரு மாவட்டத்தால் முதலிடத்துக்கு வர முடியவில்லை. மைசூரில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் தேவை என்பது, பல ஆண்டுகள் கோரிக்கையாகும். இதுவரை எந்த அரசுகளும் இவ்விஷயத்தில், தீவிரமாக ஆர்வம் காட்டவில்லை. விளையாட்டு அரங்கம் கோரிக்கை, கிணற்றில் போட்ட கல்லாக இருந்தது. கர்நாடகாவின், இரண்டாவது மிகப்பெரிய நகர் என, பெயர் பெற்றுள்ள மைசூரில், சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடத்த வசதியாக, தரமான விளையாட்டு அரங்கம் கட்ட வேண்டும் என, இன்றைய அரசிடம் கோரிக்கை வலுத்தது. இதற்கு அரசும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, விளையாட்டு அரங்கம் கட்ட, பல இடங்கள் பார்க்கப்பட்டன. மைசூரின் வெளிவட்ட சாலையை ஒட்டியுள்ள, ஹன்ச்யா சாத்தகள்ளி அருகில், 20 ஏக்கர் நிலம் பார்க்கப்படது. ஆனால் மத்தியில் ஏரி இருப்பதால், அந்த நிலம் கைவிடப்பட்டது. அதன்பின் வருணா சுற்றுப்பகுதிகளில், அதிகாரிகள் நிலம் தேடினர். இத்தாலுகாவின் இலவாலா பேரூராட்சியின், ஹுயிலாலு அருகில் விளையாட்டு அரங்கம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. இதை மார்க்கெட் விலைப்படி, கிரிக்கெட் அசோசியேஷனுக்கு வழங்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விஷயத்தை பெலகாவியில் நடக்க உள்ள சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் தெரிவித்து, ஒப்புதல் பெற்ற பின், அந்த இடம் அதிகாரப்பூர்வமாக, கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷனிடம் ஒப்படைக்கப்படும். இங்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்கம் கட்டப்படும். இது குறித்து, விளையாட்டு துறை அதிகாரிகள் கூறியதாவது: புதிய விளையாட்டு அரங்கம் கட்ட, மைசூரில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள, ஹுயிலாலு கிராமத்தின் சர்வே எண் 312ல், 19 ஏக்கர் நிலமும், சர்வே எண் 313ல் 7.31 ஏக்கர் நிலமும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த இடத்தை கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷனுக்கு வழங்கும்படி, அரசிடம் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. அந்த நிலம் இதற்கு முன், தனியார் நிறுவனத்துக்கு 30 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அளிக்கப்பட்டிருந்தது. ஒப்பந்த காலம் முடிந்ததால், திரும்ப பெறப்பட்டது. தற்போது அந்த நிலம் அரசு வசம் உள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் அசோசியேஷனிடம் கைமாற்றிய பின், விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகள் துவங்கும். தற்போது மானச கங்கோத்ரியில் உள்ள, ஸ்ரீகண்டதத்த உடையார் விளையாட்டு அரங்கில், மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த அரங்கம் சிறியது என்பதால் சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்த முடியவில்லை. இங்கு புதிய விளையாட்டு அரங்கம் கட்டி முடித்தால், போட்டிகள் நடத்த உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி