விசாரணை கைதி பாம்பே சலீமால் சிறை அதிகாரிகளுக்கு தலைவலி
சிக்கபல்லாபூர்: பல வழக்குகளில் தொடர்புடைய பாம்பே சலீம், சிக்கபல்லாபூர் சிறை அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக இருக்கிறார். கர்நாடகா மட்டுமின்றி, தென் மாநிலங்களால் தேடப்பட்ட பாம்பே சலீம் மீது ஆள் கடத்தல், வீடுகளில் திருட்டு உட்பட, பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் உட்பட, ஏழு குற்றவாளிகளை, நடப்பாண்டு பிப்ரவரியில், சிக்கபல்லாபூரின், பாகேபள்ளி போலீசார் கைது செய்தனர். தற்போது இவர் சிக்கபல்லாபூர் மாவட்ட சிறையில், விசாரணை கைதியாக அடைக்கப்பட்டுள்ளார். இங்கு அதிகாரிகளை தாக்குவது, சக கைதிகளை மிரட்டுவது உள்ளிட்ட அடாவடி செயல்களில் சலீம் ஈடுபடுகிறார். எனவே இவரை வேறு சிறைக்கு மாற்ற அதிகாரிகள் நினைத்தனர். இதற்காக பல்லாரி சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள அதிகாரிகள், அவரை சேர்க்க மறுத்தனர். அங்கிருந்து கொப்பால் சிறைக்கு அழைத்துச் சென்றனர்; அங்கும் அவரை சேர்த்துக் கொள்ளவில்லை. அதன்பின் சித்ரதுர்கா சிறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கும் கூட பாம்பே சலீமின் சகவாசமே வேண்டாம் என, கூறிவிட்டனர். வேறு வழியின்றி அவரை, சிக்கபல்லாபூருக்கே அழைத்து வந்தனர். இரண்டு நாட்களாக அலைந்தது தான் மிச்சம் என, அதிகாரிகள் தங்கள் இயலாமையை தெரிவித்துள்ளனர்.