அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கு ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் ஜோஷியிடம் விசாரணை
பெங்களூரு: முன்னாள் ஏட்டு உதவியுடன், அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி, லோக் ஆயுக்தா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் ஐந்து மணி நேரம் விசாரணை நடந்தது.சித்ரதுர்காவை சேர்ந்தவர் நிங்கப்பா. முன்னாள் போலீஸ் ஏட்டு. லோக் ஆயுக்தா ரெய்டு பெயரில், அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், நிங்கப்பா கைது செய்யப்பட்டார்.விசாரணையில் நிங்கப்பாவுக்கும், லோக் ஆயுக்தாவில் எஸ்.பி.,யாக இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.இதனால் ஐ.பி.எஸ்., அதிகாரி மீதும் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கைதில் இருந்து தப்பிக்க உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் வாங்கினார். விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி அவருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.இந்நிலையில், லோக் ஆயுக்தா விசாரணை அதிகாரி திப்பேசாமி முன், நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு, ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.விசாரணையின்போது, 'நிங்கப்பாவுக்கும், உங்களுக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது; அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிப்பது பற்றி உங்களுக்கு எப்போது தெரிந்தது; அதிகாரிகளை மிரட்டியதில் உங்களுக்கும் தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது, இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்; மிரட்டி பறித்த பணத்தை கிரிப்டோகரன்சியில் நிங்கப்பா முதலீடு செய்து உள்ளார், இதுபற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என, பல கேள்விகள் கேட்கப்பட்டன.பெரும்பாலான கேள்விகளுக்கு தனக்கு எதுவும் தெரியாது என, ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி பதில் அளித்துள்ளார்.அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறி உள்ளார்.அவர் பயன்படுத்திய இரண்டு மொபைல் போன்களை, லோக் ஆயுக்தா போலீசார் ஆய்வு செய்தபோது, சில படங்கள், வாட்ஸாப் செய்திகளை அழித்தது தெரிய வந்துள்ளது.அதை மீட்டெடுக்க தடய அறிவியல் ஆய்வகத்திற்கு, இரண்டு மொபைல் போன்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.