ஹிந்து மதத்தை அவமதிப்பதா? பா.ஜ., - எம்.எல்.ஏ., கண்டனம்
பெங்களூரு : ''தர்மஸ்தலா வழக்கு குறித்து விசாரணை என்ற பெயரில் ஹிந்து மதத்தை அவமதிப்பதை ஏற்க மாட்டோம்,'' என, கார்கலா பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் கூறி உள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஜாதிகள், துணை ஜாதிகள் பட்டியல் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிக்க, மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஏழு நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. இதை மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். ஜாதிகளின் பட்டியலில் எங்களுக்கு குழப்பம் உள்ளது. பா.ஜ., குழு அடுத்த வாரம் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய அலுவலகத்திற்கு சென்று, குழப்பம், சந்தேகங்களை குறித்து கேள்வி கேட்போம். தர்மஸ்தலா வழக்கு குறித்து விசாரிக்கும், எஸ்.ஐ.டி., விசாரணையில் நாங்கள் தலையிட மாட்டோம். ஆனால் விசாரணை என்ற பெயரில், ஹிந்து மதத்தை அவமதிப்பதை ஏற்க மாட்டோம். தர்மஸ்தலா வழக்கு திட்டமிடப்பட்ட சதி என்று நாங்கள் கூறினோம். துணை முதல்வர் சிவகுமாரும் ஒப்புக்கொண்டார். விசாரணையின் மூலம் அனைத்து உண்மையும் வெளிவர வேண்டும். மைசூரு தசரா, நாட்டு மக்களின் பக்தி, கலாசாரத்தை வெளிப்படுத்தும் விழா. இதன் துவக்க விழா எப்படி இருக்க வேண்டும் என்பதை, ஆட்சியில் உள்ள பொறுப்பான அரசு தீர்மானித்திருக்க வேண்டும். இஸ்லாத்தில் சிலை வழிபாடு அனுமதிக்கப்பட்டால், அதை பானு முஷ்டாக் ஏற்றுக்கொண்டால், தசராவை அவர் துவக்கி வைப்பதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. சித்தராமையா அரசே தன் மீது சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டது. ஹிந்துக்களை அவமதிப்பது, முதல்வர் சித்தராமையாவின் நோக்கமாக உள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பாடலை பாடியதற்காக, துணை முதல்வர் சிவகுமார் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக கூறி உள்ளார். இதற்கு காங்கிரஸ் மேலிடத்தின் அழுத்தமே காரணம். மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால், விதான் சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷம் எழுப்பப்பட்டதற்கும், ஹிந்து என்ற வார்த்தை ஆபாசமானது என, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியதற்கும், சிவகுமார் முதலில் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, ஆர்.எஸ்.எஸ்., பாடல் பாடியதற்காக அவர் மன்னிப்பு கேட்டிருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.