உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சுதா மூர்த்தி எல்லாம் தெரிந்தவரா? முதல்வர் சித்தராமையா அதிருப்தி

சுதா மூர்த்தி எல்லாம் தெரிந்தவரா? முதல்வர் சித்தராமையா அதிருப்தி

மைசூரு: ''ஜாதிவாரி சர்வேயில் பங்கேற்காத, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி எல்லாம் தெரிந்தவர்களா?'' என, முதல்வர் சித்தராமையா கேள்வி கேட்டுள்ளார். மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் நடப்பது ஜாதிவாரி சர்வே இல்லை; சமூக மற்றும் பொருளாதார தகவல் சேகரிப்பு சர்வே என்று நான் பல முறை கூறிவிட்டேன்; அமைச்சர்களும் கூறி உள்ளனர். ஆனால் இங்கு, ஜாதிவாரி சர்வே நடப்பதாக நினைக்கின்றனர். சர்வேயில் பங்கேற்க மாட்டேன் என்று, இன்போசிஸ் நாராயண மூர்த்தி, சுதா மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளனர். இந்த சர்வே குறித்து அவர்களிடம் தவறான தகவல் உள்ளது. அவர்கள் எல்லாம் தெரிந்தவர்களா? மத்திய அரசு ஜாதிவாரி சர்வே நடத்தும்போது, அதில் பங்கேற்றாமல் இருப்பரா? மக்களின் பொருளாதார நிலையை கண்டறியவே சர்வே எடுக்கப்படுகிறது. பீஹார் தேர்தலில் 'இண்டி' கூட்டணி வெற்றி பெறும். அங்குள்ள மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். ராகுலின் பாதயாத்திரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பா.ஜ., ஜெகதீஷ் ஷெட்டர் 2013ல் முதல்வராக இருந்தபோது, அரசு பள்ளி வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பது தொடர்பான உத்தரவு வெளியானது. அந்த உத்தரவின் அடிப்படையில், அரசு இடங்களில் தனியார் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளோம். தேவைப்பட்டால் அனுமதி பெற்று நடத்தலாம். ஆர்.எஸ்.எஸ்., நிகழ்ச்சிக்கு மட்டும் நாங்கள் தடை விதிக்கவில்லை. அனைத்து தனியார் நிகழ்ச்சிகளுக்கும் அடங்கும். முதலீட்டாளர்கள் தங்களுக்கு வசதியான மாநிலங்களில் முதலீடு செய்கின்றனர். அது அவர்கள் விருப்பம். இங்கு முதலீடு செய்தவர்களுக்கு தேவையான வசதி செய்து கொடுத்துள்ளோம். உலக முதலீட்டாளர் உச்சி மாநாட்டில், இந்திய முதலீடுகளில் கர்நாடகா முதலிடத்தில் உள்ளது. நிலுவை தொகை வழங்கவில்லை என்று, அரசு மீது ஒப்பந்ததாரர் சங்கம் பொய் குற்றச்சாட்டு வைக்கிறது. தேவைப்பட்டால் அவர்கள் நீதிமன்றம் செல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ