ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ., காங்கிரசில் இணைகிறாரா?
பெங்களூரு: தேவதுர்கா தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., கரெம்மா நாயக், துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்து பேசியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே, பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களை, காங்கிரசுக்கு இழுப்பதில் துணை முதல்வர் சிவகுமார் ஆர்வம் காட்டுகிறார். சட்டசபை தேர்தலில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த லட்சுமண் சவதி, ஜெகதீஷ் ஷெட்டர், யோகேஸ்வர் போன்ற பிரபல தலைவர்களை காங்கிரசுக்கு அழைத்து வந்தார்.ஜெகதீஷ் ஷெட்டர், மீண்டும் பா.ஜ.,வுக்கு திரும்பிவிட்டார். லட்சுமண் சவதி, யோகேஸ்வர் காங்கிரசில் உள்ளனர். இப்போதும் பா.ஜ., மற்றும் ம.ஜ.த.,வின் சில எம்.எல்.ஏ.,க்களுக்கு, சிவகுமார் வலை விரித்துள்ளார். சமீபத்தில் பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட சோமசேகரும், சிவராம் ஹெப்பாரும் காங்கிரசுக்கு திரும்ப காத்திருக்கின்றனர்.இதற்கிடையே ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தொகுதியின் ம.ஜ.த., பெண் எம்.எல்.ஏ., கரெம்மா நாயக், நேற்று காலை திடீரென டில்லிக்கு சென்றார். அங்கு துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்தார். இருவரும் சிறிது நேரம் பேச்சு நடத்தினர். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக ம.ஜ.த.,வில் தலைவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குமாரசாமி எம்.பி.,யாகி, மத்திய அமைச்சராக தேசிய அரசியலுக்கு சென்று விட்டார். பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் பலாத்கார வழக்கில், சிறைக்கு சென்ற பின், ரேவண்ணா குடும்பத்தினர் பெயரளவுக்கு அரசியலில் உள்ளனர். பொது இடங்களில் அவ்வளவாக தென்படுவது இல்லை.இளைஞர் பிரிவு தலைவர் நிகில் குமாரசாமி, தொடர்ந்துமூன்று முறை தேர்தலில் தோற்றார். இவரை மக்கள் ஏற்கவில்லை என்பது இதில் இருந்தே தெரிகிறது. எனவே கட்சியை வழி நடத்த தலைவர்கள் இல்லை. இதே கட்சியில் செல்வாக்கு பெற்றிருந்த ஜமீர் அகமது கான், செலுவராயசாமி உட்பட பல தலைவர்கள் காங்கிரசுக்கு சென்றுவிட்டனர்.ம.ஜ.த.,வில் இருந்தால், தங்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என, நினைக்கும் சில எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைய ஆலோசிக்கின்றனர். இந்நிலையில், கரெம்மா நாயக், ம.ஜ.த.,வுக்கு முழுக்கு போட்டு, காங்கிரசில் இணையும் நோக்கில், துணை முதல்வர் சிவகுமாரை டில்லியில் சந்தித்தாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.