அரசின் 59 மாடி இரட்டை கட்டடம் தனியாருக்கு வாடகைக்கு விட திட்டம்?
பெங்களூரு : பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் 59 அடுக்குமாடி கொண்ட இரட்டை கட்டடம் கட்ட முடிவு செய்துள்ள அரசு, கூடுதல் வருவாய்க்காக தனியார் நிறுவனங்களுக்கும் வாடகைக்கு அளிக்கத் திட்டமிட்டுள்ளது.பெங்களூரில் மாநில அரசின் பல துறைகள், தனியார் கட்டடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகின்றன. இதனால் வாடகைக்கே மாதந்தோறும் கோடிக்கணக்கான ரூபாய், செலவிடப்படுகிறது.இதை தவிர்க்கும் வகையில், பெங்களூரு ஆனந்தராவ் சதுக்கத்தில் எட்டு ஏக்கர் நிலத்தில், 25 மாடிகள் கொண்ட இரட்டை கட்டடம் கட்ட, 2020ல் அப்போதைய எடியூரப்பா அரசு தீர்மானித்திருந்தது. ஆட்சி மாற்றத்துக்கு பின், அதே இடத்தில், 59 மாடிகள் கொண்ட கட்டடம் கட்ட, தற்போதைய காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அதேவேளையில், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில், இந்த 59 மாடிகள் கொண்ட இரட்டை கட்டடத்தில், தனியாருக்கும் வாடகைக்கு விட ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.இதுதொடர்பாக பொதுப்பணி துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'இரட்டை கட்டடம் கட்டப்படும் இடத்தின் அருகிலேயே ரயில் நிலையம், பஸ் நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இதனால் வாடகைக்கு விட்டால், கண்டிப்பாக பல தனியார் நிறுவனங்கள், ஆர்வமுடன் வரும்' என்றார்.