மைசூரு அருகே சிக்கியது புலி 3 விவசாயிகளை கொன்றது இதுதானா?
பெங்களூரு: ''விவசாயிகள் மூவரை கொன்றதாக கூறப்படும் புலியை, வனத்துறையினர் பிடித்துள்ளனர். விவசாயிகளை கொன்றது இந்த புலிதானா என்பதை கண்டறிய, மரபணு சோதனை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே தெரிவித்தார். மைசூரில் கடந்த ஒரு மாதத்தில் பன்னேகெரே கிராமத்தின் ராஜசேகர், குர்னேகல் கிராமத்தின் தொட்டனிங்கையா, ஹெக்குடிலு கிராமத்தின் சவுடய்யா நாயக் ஆகியோர் புலி தாக்கியதில் உயிரிழந்தனர். சரகுரின் படகலபுரா கிராமத்தில் புலி தாக்கியதில் மாதே கவுடா, தன் இரு கண்களை இழந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து, பண்டிப்பூர் தேசிய பூங்கா, நாகரஹொளே புலிகள் வனப்பகுதியில் மறு உத்தரவு வரும் வரை, சபாரிக்கு தடை விதிக்கப்பட்டது. புலியை கண்டுபிடிக்கும் பணியில், இவ்விரு இடங்களிலும் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஊழியர்களை ஈடுபடுத்த வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இரண்டு நாட்களாக புலியை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், 12 - 13 வயதுள்ள ஆண் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இது குறித்து, அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறியதாவது: மைசூரின் சரகுரில் மக்களை தாக்கி வந்த ஆண் புலி பிடிபட்டது. பிடிபட்ட புலி தான் மூன்று விவசாயிகளை கொன்றதா என்பதை உறுதிப்படுத்த, இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை, புலியின் மரபணு இரண்டையும் சரிபார்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பிடிபட்ட புலியின் பற்கள் பலவீனமாக உள்ளன. இதனால் வனப்பகுதியில் தாவர உண்ணி விலங்குகளை வேட்டையா முடியாத இந்த புலி, கிராமங்களுக்கள் நுழைந்து மக்களையும், கால்நடைகளையும் கொன்று வருவதாக அதிகாரிகள் விளக்கி உள்ளனர். புலி நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதி அருகில் முகாம் அமைத்து, பிடிபட்ட புலியை தவிர, வேறு ஏதேனும் புலிகள், மக்களையும், கால்நடைகளையும் தாக்கி உள்ளனவா என்பதை சரிபார்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மைசூரில் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட ஆண் புலி.