உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மங்களூரு சிறையில் ஜாமர் 800 மீட்டர் சிக்னல் பிரச்னை

 மங்களூரு சிறையில் ஜாமர் 800 மீட்டர் சிக்னல் பிரச்னை

மங்களூரு: மங்களூரின் சிறையில் பொருத்தியுள்ள ஜாமரால் மாவட்ட நீதிமன்றத்தில் 'நெட்ஒர்க்' பிரச்னை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மங்களூரு நகரின் மாவட்ட சிறையில் கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தினர். இதை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அவ்வப்போது சிறையில் சோதனை நடத்தி, மொபைல் போன்களை கைப்பற்றினாலும், கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவதை கட்டுப்படுத்த முடியவில்லை. நல்ல பலன் எனவே ஜாமர் பொருத்தப்பட்டது; இது நல்ல பலனை கொடுத்துள்ளது. கைதிகள் மொபைல் போன் பயன்படுத்துவது கட்டுக்குள் வந்தது. ஆனால் ஜாமர் பொருத்தியதால், சிறையின் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிக்னல் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அது மட்டுமின்றி, சிறையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள, தட்சிணகன்னடா மாவட்ட நீதிமன்றத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சிக்னல் பிரச்னையால் வக்கீல்களால் பணியாற்ற முடியவில்லை. நீதிமன்றத்தில் மொபைல் போனில் கட்சிக்காரர்களுடன் பேச முடியவில்லை; யாரையும் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, அரசுக்கு உத்தரவிடகோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வக்கீல்கள் சங்கத்தினர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதுதொடர்பாக மங்களூரு வக்கீல்கள் சங்க தலைவர் ராகவேந்திரா கூறியதாவது: சிறையில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதால், நீதிமன்றத்திலும் சிக்னல் கிடைப்பது இல்லை. கட்சிக்காரர்கள், ஜூனியர் வக்கீல்களை தொடர்பு கொள்ள முடிவதில்லை. கூகுள் பே செய்ய முடிவதில்லை. எனவே உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளோம். நீதிமன்றமும் சிறை அதிகாரிகளிடம், ஜாமரின் திறன் எப்படி, எவ்வளவு துாரம் வரை செயல்படுகிறது என, தகவல் தெரிவிக்கும்படி உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை