உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடகாவில் ரூ.4,000 கோடி முதலீடு ஜப்பான் நிறுவனங்கள் விருப்பம்: அமைச்சர்

கர்நாடகாவில் ரூ.4,000 கோடி முதலீடு ஜப்பான் நிறுவனங்கள் விருப்பம்: அமைச்சர்

பெங்களூரு: ''கர்நாடகாவில் 4,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய, ஜப்பான் நிறுவனங்கள் முன்வந்துள்ளன,'' என, மாநில தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்தார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கர்நாடகாவில் முதலீடுகளை ஈர்க்க, ஜப்பானுக்கு இரண்டாவது முறையாக சென்றேன். அந்நாட்டினர், பாரம்பரிய சிந்தனையாளர்கள். முடிவுகள் எடுக்கும் முன்பு, நீண்ட காலம் யோசித்து, சரியாக வரும் என்பதை அறிந்த பின்னரே முடிவெடுப்பர். இன்று நாட்டில் உள்ள ஜப்பானிய நிறுவனங்களில், கர்நாடகாவில் மட்டும் 50 சதவீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜப்பான், தென் கொரியா சென்றபோது, 6,500 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இந்த விஜயத்தின்போது, மாநிலத்தின் ஹோண்டா உள்ளிட்ட நிறுவனங்களை விரிவாக்குவது; முகுந்த் சுமி ஸ்டீல்ஸ் நிறுவனத்துடன் கூட்டு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. இதற்கிடையில், மின்னணு மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர, அனைத்து இந்திய தயாரிப்புகளுக்கும் அமெரிக்கா, 50 சதவீதம் இறக்குமதி வரி விதித்திருப்பது நெருக்கடியை உருவாக்கி உள்ளது. இச்சூழ்நிலையில், முதலீட்டாளர்கள் ஒரு முடிவை எடுப்பது கடினமாகிறது. இருப்பினும், இந்த வருகையின்போது, 4,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர். சில நிறுவனங்கள், குறைந்த அளவில் முதலீடு செய்யலாம். ஆனால், இவை நம் தொழில்துறை பணி சூழலுக்கு மதிப்பை சேர்க்கும். மேலும், முதலீட்டை பொறுத்த வரை, தொழில் முனைவோர், அமைதியான சூழலை விரும்புவர். இதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டின் எந்த பகுதியிலும் முதலீடுக்கு விரோதமான சூழ்நிலை உருவாகக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை