கம்பாலா போட்டி நடத்த ஐகோர்ட் அனுமதி; பீட்டா மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்
பெங்களூரு : 'பாரம்பரிய விளையாட்டான கம்பாலாவை, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மட்டுமே நடத்த வேண்டும்,' என்று 'பீட்டா' நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கர்நாடகாவில் தட்சிண கன்னடா, உடுப்பி போன்ற கடலோர மாவட்டங்களில் கால காலமாக 'கம்பாலா' எனும் எருது விடும் போட்டி நடந்து வருகிறது. இத்தகைய போட்டி, கடந்தாண்டு பெங்களூரில் நடந்தது. இதற்கு பெங்களூரு மக்களிடம் அமோக ஆதரவு எழுந்தது. பீட்டா மனு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டு உள்ளதாவது: நடப்பாண்டு நவம்பர் 5ம் தேதி பெங்களூரில் கம்பாலா நடத்த, பெங்களூரு கம்பாலா குழுவுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று உத்தரவிட வேண்டும்' என்று மாநில அரசிடம், பீட்டா அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. அதற்கு அரசோ, 'பெங்களூரில் கம்பாலா போட்டி நடக்கவில்லை' என்று கூறி உள்ளது. தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் பிலிகுலா உயிரியல் பூங்கா அருகில் நவ., 17ல் 'கம்பாலா' நடக்க உள்ளது. இதனால் உயிரியல் பூங்காவில் உள்ள மற்ற விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இப்போட்டிக்கு அனுமதி அளிக்க கூடாது. மைதானத்தை மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது. வர்த்தக நோக்கம் இம்மனு தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. பீட்டா தரப்பு வக்கீல் தியான் சின்னப்பா வாதிடுகையில், ''கம்பாலா போட்டி, தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் மட்டுமே நடத்தப்படும் பாரம்பரிய விளையாட்டு. அதை விடுத்து பெங்களூரில் நடத்துவது வியாபார நோக்கமாகும்,'' என்றார். அரசு தரப்பு அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிட்டதாவது: குறிப்பிட்ட இடத்தில் விழாக்களை நடத்துவது, அந்த கலாசாரம் மேம்படுகிறதா என்பதை பார்க்க வேண்டும். குதிரைகளும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. பெங்களூரில் கம்பாலா நடக்கும் போது எவ்வாறு நடத்த வேண்டும் என்ற விதிகளை வெளியிட்டு உள்ளோம். விலங்குகள் மங்களூரில் இருந்து பெங்களூருக்கு பயணிக்கும் போது, அனைத்து நிபந்தனைகளும் கவனிக்கப்படுகின்றன. இது மாநிலத்தின் கலாசாரத்தை ஊக்குவிக்கிறது. இதில் தவறு நடந்தால், வழக்கு தொடரலாம்; இதை தடுக்க தேவையில்லை. நாங்கள் விதிகளை மீறவில்லை. விதிகள் மீறியதாக நீதிபதிகள் கருதினால், நடவடிக்கை எடுக்கலாம். இது மாநிலத்தின் கலாசாரம். இவ்வாறு அவர் கூறினார். அரசுக்கு அனுமதி தலைமை நீதிபதி விபு பக்ரு கூறியதாவது: கம்பாலா போட்டியை தட்சிண கன்னடா, உடுப்பி தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் நடத்தலாம். பிலிகுலா உயிரியல் பூங்காவை ஒரு திருவிழா மைதானமாக மாற்ற முடியாது. நீங்கள் (அரசு) உயிரியல் பூங்கா என்று வரையறுத்தால், அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும். பூங்காவில் எதற்கெல்லாம் அனுமதி உள்ளது; எதற்கெல்லாம் அனுமதி இல்லை என்பதை எங்களுக்கு கூறுங்கள். மாநிலத்தின் ஒரு பகுதியில் கடைபிடிக்கப்படும் கலாசாரம், ஒட்டுமொத்த மாநிலத்தின் கலாசாரமாகும். இல்லை என்றால், கலாசாரமே இல்லை. பீட்டா மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. பிலிகுலாவின் உண்மையான நிலையை அரசு விளக்க வேண்டும். அதன் பின், அங்கு கம்பாலா ஏற்பாடு செய்வது குறித்து அடுத்த விசாரணையில் விவாதிக்கலாம். இவ்வழக்கு விசாரணை நவ., 11ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.