உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கர்நாடக ஆஷா ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்

கர்நாடக ஆஷா ஊழியர்கள் காலவரையற்ற போராட்டம்

பெங்களூரு: கர்நாடகாவின், ஆஷா சுகாதார ஊழியர்கள், மாதம் 15,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெங்களூரு சுதந்திர பூங்காவில் காலவரையற்ற போராட்டத்தை நேற்று துவங்கினர். இப்போராட்டத்தில் மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பங்கேற்றனர். கடும் குளிரிலும் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக ஆஷா பணியாளர் சங்க மாநில செயலர் நாகலட்சுமி பேசியதாவது: ஆஷா பணியாளர்களுக்கு மாதந்தோறும், 15,000 ரூபாய் நிலையான மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும். ஸ்மார்ட் போன்களை வழங்குவதோடு மட்டுமின்றி, ரீசார்ஜ் செய்வதற்கான தொகையும் அளிக்கப்பட வேண்டும். ஆறு மாத ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சுகாதாரத்துறை தொடர்பில்லாத பணிகளை செய்ய கட்டாயப்படுத்தக்கூடாது. கடந்த, 2025 பிப்ரவரி 25 முதல் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆஷா ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும், மாதாந்திர ஊக்கத்தொகை உட்பட நிலுவையில் உள்ள அனைத்து தொகைகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, பல முறை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த தினேஷ் குண்டுராவ் பேச்சு நடத்தி சமாதானம் செய்தார். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபோன்று, முதல்வராக இருந்த சித்தராமையாவும் நம்பிக்கை அளித்து ஏமாற்றினார். இம்முறை கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !