உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  காஷ்மீரில் தவித்த கன்னடர்களை மீட்க தனி விமானம்!:கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏற்பாடு

 காஷ்மீரில் தவித்த கன்னடர்களை மீட்க தனி விமானம்!:கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏற்பாடு

காஷ்மீரில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில், கர்நாடகாவை சேர்ந்த இருவர் மற்றும் பெங்களூரில் வசித்த ஆந்திர நபர் என மூவர் பலியாகினர். மேலும், அங்கு சிக்கி தவித்த 40க்கும் மேற்பட்ட கன்னடர்களை மீட்டு வர, தனி விமானத்தை முதல்வர் சித்தராமையா ஏற்பாடு செய்து, அமைச்சர் சந்தோஷ் லாடையும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் நேற்று முன்தினம் 28 சுற்றுலா பயணியரை, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். கர்நாடகாவின் ஷிவமொக்கா டவுன் விஜயநகரை சேர்ந்த மஞ்சுநாத் ராவ், 47, ஹாவேரியை சேர்ந்தவரும், பெங்களூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்தவருமான பாரத் பூஷன், 40, ஆகியோர் இதில் உயிரிழந்தனர்.இந்நிலையில், ஆந்திராவின் நெல்லுாரை சேர்ந்தவரும், பெங்களூரு ராமமூர்த்தி நகரில் வசித்து வந்தவருமான மதுசூதன், 37, என்பவரையும், பயங்கரவாதிகள் சுட்டு கொன்றது நேற்று தெரிந்தது. காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற கன்னடர்களை மீட்க, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், ஐ.பி.எஸ்., அதிகாரி சேத்தன் தலைமையிலான குழு அங்கு விரைந்தது.

மனைவிக்கு ஆறுதல்

காஷ்மீரில் ஹோட்டல், பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்த கன்னடர்களை சந்தித்து சந்தோஷ் லாட் ஆறுதல் கூறினார். பின், காஷ்மீரில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்த, மஞ்சுநாத் ராவ், பாரத் பூஷன், மதுசூதன் உடல்களை பார்வையிட்டார். சவ பெட்டியில் வைக்கப்பட்டிருந்த உடல்களுக்கு, அஞ்சலி செலுத்தினார். மஞ்சுநாத் ராவ் மனைவி பல்லவிக்கு ஆறுதல் கூறினார். மூன்று பேரின் உடல்களையும், காஷ்மீரில் இருந்து கொண்டு வருவதற்கான தேவையான ஏற்பாடுகளை, கர்நாடக அரசு செய்து வருகிறது. மஞ்சுநாத் ராவை பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பின், அவரது மனைவி பல்லவி, மகன் அபிஷேக் ஆகியோர் தங்களையும் கொன்று விடும்படி, பயங்கரவாதிகளிடம் கேட்டு உள்ளனர்.கொல்ல மறுத்த அவர்கள், 'மோடியிடம் போய் சொல்லுங்கள்' என்று கூறியுள்ளனர். இதுபோல கர்நாடகாவின் மற்ற இருவரையும் பயங்கரவாதிகள் கொடூரமாக கொன்றது பற்றியும், தகவல் வெளியாகி உள்ளது.

ஆதார் அட்டை

அதாவது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதும் பாரத் பூஷனும், அவரது குடும்பத்தினரும் உயிரை காப்பாற்றி கொள்ள தப்பி ஓடினர். ஒரு மரத்தின் அருகே பாரத் பூஷன் அமர்ந்து இருந்திருக்கிறார். அவரை பிடித்த பயங்கரவாதிகள், 'நீ முஸ்லிமா, ஹிந்துவா' என்று கேட்டு உள்ளனர். அவரது ஆதார் அட்டையை வாங்கி பார்த்து ஹிந்து என்று தெரிந்ததும் துப்பாக்கியால் சுட்டு கொன்று உள்ளனர். அதுவும் மனைவி கண்முன்பு இந்த கோரம் நடந்துள்ளது.அவருக்கு மூன்றரை வயதில் குழந்தை உள்ளது. சாப்ட்வேர் இன்ஜினியரான பாரத், புதிதாக தொழில் துவங்க திட்டமிட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இன்னொருவரான மதுசூதன் மனைவி காமாட்சி, மகள் மேதா, மகன் முகுந்த் ஆகியோருடன், காஷ்மீர் சுற்றுலா சென்றிருந்தார்.பஹல்காமில் புல் தரையில் அமர்ந்து இயற்கை அழகை ரசித்த போது, அவரை சுட்டு கொன்று உள்ளனர்.

சிறப்பு விமானம்

முதல்வர் சித்தராமையாவின், 'எக்ஸ்' வலைதள பதிவு:காஷ்மீருக்கு சுற்றுலா சென்று இருந்த 40க்கும் மேற்பட்ட கன்னடர்கள், பயங்கரவாத தாக்குதலால் அங்கு சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டு வர, சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் அங்கு சென்றுள்ளார்.ஒவ்வொரு கன்னடரையும் பாதுகாப்பாக, மாநிலத்திற்கு அழைத்து வர எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து உள்ளது. யாரும் கவலைப்பட தேவை இல்லை.இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.காஷ்மீரில் இருந்து புறப்படும் சிறப்பு விமானத்தில் 40க்கும் மேற்பட்ட கன்னடர்கள் அழைத்து வரப்படுவதுடன், உயிரிழந்த மூவரின் உடல்களும் கொண்டு வரப்படும். இன்று அதிகாலை 3:00 மணிக்கு விமானம் பெங்களூரில் தரையிறங்கும் என்றும், தகவல் வெளியாகி உள்ளது.

ரூ.56 லட்சம்

சந்தோஷ் லாட், கர்நாடகாவில் இருந்து ஸ்ரீநகருக்கு நேற்று முன்தினம் இரவு செல்ல முயன்ற போது, அவருக்கு சிறப்பு விமானம் கிடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், மும்பையை சேர்ந்த விமான நிறுவனத்தின், சிறப்பு விமானத்தில் ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றார். அந்த விமானத்தில் தான் கன்னடர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இதற்கு 56 லட்சம் ரூபாய் கட்டணம் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இது நேரம் இல்லை

இந்நிலையில் சுட்டு கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசியதாவது:காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு இருப்பது வேதனை ஏற்படுத்தி உள்ளது. இது சோகமான சம்பவம். உயிரிழந்தோர் குடும்பத்தினர் தாங்க முடியாத வேதனையில் உள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருக்கும்.நம் நாட்டில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர், காங்கிரஸ் தலைவர்களிடம் பேசி உள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பேசி இருக்கிறேன். பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பு தோல்வியா என்பதை பற்றி பேச இது நேரம் இல்லை. இந்த பிரச்னையை அனைவரும் ஒன்றாக எதிர்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது பற்றி விவாதிக்க மத்திய அரசு உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். இதில், யாரும் அரசியல் செய்ய வேண்டாம். கோடை காலம் துவங்கி இருப்பதால், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்து உள்ளது. அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.56 லட்சம் செலுத்திய அமைச்சர்

காஷ்மீருக்கு சென்று கன்னடர்களை மீட்டு வர சித்தராமையா உத்தரவிட்டதால், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் நேற்று முன்தினம் இரவு ஹூப்பள்ளி விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீநகர் செல்ல நினைத்தார். ஆனால், சிறப்பு விமானம் எளிதில் கிடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின், மும்பையில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் சந்தோஷ் லாட் புறப்பட்டு சென்றார். இதற்காக, அவர் 56 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.

அரசு ஊழியர்

பல்லாரியை சேர்ந்த பொதுப்பணித் துறை ஊழியர் தொட்டபசய்யாவும் காஷ்மீருக்கு சுற்றுலா சென்று இருந்தார். இவர், முன்னாள் போலீஸ்காரர். பஹல்காமில் துப்பாக்கி சூடு நடந்த போது அங்கு தான் இருந்தார். பயங்கரவாதிகள் கண்ணில் படாமல் தப்பித்த அவர், வயதான 10 பேரையும் காப்பாற்றி உள்ளார். போலீஸ் பயிற்சியின் போது எடுத்து கொண்ட சில யுக்திகள், 10 பேர் உயிரை காப்பாற்ற உதவியது என்று கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை