| ADDED : நவ 21, 2025 06:14 AM
பெங்களூரு: ' பெங்களூரில் தெருநாய்கள் கடித்து இறந்தால், 5 லட்சம் ரூபாயும் ; காயமடைந்தவர்களுக்கு 5,000 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும்' என, மாநில அரசு அறிவித்துள்ளது. பெங்களூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. சாலை ஓரத்தில் நடந்து செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், வாகனத்தில் செல்வோரை விரட்டி விரட்டி கடித்து வருகின்றன. படுகாயம் அடைந்த குழந்தைகளும், முதியோரும் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவங்களும் நடந்துள்ளன. ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சி ஆணையம், நாயை கட்டுப்படுத்துவதற்காக 'கு.க'., அறுவை சிகிச்சை செய்தும் அவற்றின் தொல்லை குறையவில்லை. நாடு முழுதும் தெரு நாய் தொல்லை தொடர்பாக, உச்ச நீதிமன்றமும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தெரு நாய்கள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் இறந்தாலோ அல்லது ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டாலோ, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். அதுபோன்று காயம் அடைந்தவருக்கு வழங்கப்படும், 5,000 ரூபாயில் 3,500 ரூபாய் ரொக்கமாகவும், 1,500 ரூபாய் சிகிச்சை செலவுக்காக வழங்குமாறு, சுவர்ண ஆரோக்கிய சுரக் ஷா அறக்கட்டளைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அனைத்து மாநகராட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும். நாய் கடியால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா என்பதை அறிய குழு அமைக்குமாறு ஜி.பி.ஏ.,வுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.